கொச்சையான பேச்சுகள் மேன்மை தராது- ராதாரவிக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மூத்த நடிகர் ராதாரவியின் கொச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Nadigar Sangam expresses condemnation on Radharavi's derogatory comments on Women

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, பெண்கள அவமதிக்கும் விதமாக பேசியதுடன், நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

நடிகர் ராதாரவியின் சர்ச்சை கருத்துக்கு திரையுலகை சார்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கொலையுதிர் காலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்தத்துடன் பேசியது வருத்தமளிக்கிறது. இதனை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதுமட்டுமல்ல, பல காலமாக பொது மேடைகள், திரைப்பட விழாக்கள், இணையதள நேர்காணல்களில் இதுபோன்று பெண்களை கொச்சையாகவும், இரட்டை அர்த்த வசனங்களை பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள்.

இது திரைத்துறைக்கும், நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதை ஏன் உணரவில்லை? திரைத்துறையில் தங்களது தந்தையாருக்கு பின் தொடர்ச்சியாக 50 ஆண்டுகால நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் தாங்கள் அதனை நல்வழியில் பயன்படுத்தி இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.

ஆனால், இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுகள் உங்களுக்கு மேன்மை தராது. இனியும் இதுபோன்ற வக்கிரமான பேச்சுக்களை தவிர்ப்பீர்கள் என நம்புகிறோம். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபட்டாள் தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவெடுக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.