எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பாகுபலி, பாகுபலி 2’.
இதில், ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை ரூ.52 கோடிக்கு கே புரொடக்க்ஷன்ஸ் ராஜராஜன் வாங்கியிருந்தார். தமிழகத்தில் ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய நிலையில், இப்படத்தை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு ரூ.17.6 கோடி பாக்கி வைத்திருப்பதாக கே புரொடக்க்ஷன்ஸ் மீது ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கே புரொடக்க்ஷன்ஸ் சார்பில் கொடுத்த செக் பணம் இல்லாத காரணத்தால் திரும்பிவிட்டதாக அர்கா மீடியா சார்பில் கே புரொடக்க்ஷன்ஸ் ராஜராஜனுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வக்கீல் நோட்டிஸில் இன்னும் ஒருவாரத்தில் பணம் செலுத்தவிலை என்றால் கே ப்ரோடுக்ஷன்ஸ் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள கே புரொடக்க்ஷன்ஸ், தங்களது நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அர்கா மீடியா தவறான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்கா மீடியாவின் குற்றச்சாட்டுகளை மறுப்பதுடன், தவறான தகவல்களை தெரிவித்ததால் சட்டப்படி அந்நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என கே புரொடக்க்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், தாங்கள் எப்போதும் சிறந்த மற்றும் நம்பகத்தனமான சேவையை செய்து வருவதாகவும், அர்கா மீடியா கூறும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.