தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் நடிப்பது குறித்த அனுபவத்தை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோஃப் பகிர்ந்துள்ளார்.
‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோஃப் நடிப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது ‘தளபதி 63’ படத்தில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷ்ரோஃப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் மற்றும் அட்லியுடன் பணிபுரிவது அற்புதமாக உள்ளது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய்யுடன் நடிப்பதில் மகிழ்ச்சி. அவர் இயக்கிய ‘குத்ரத் கா கனூன்’ படத்தில் நடித்திருக்கிறேன். அப்பாவை தொடர்ந்து தற்போது மகனுடன் பணிபுரிகிறேன் என கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மென்மையானவர், சிறந்த மனிதர். அட்லி ஒரு சிறந்த இயக்குநர். தளபதி 63 ஷூட்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறேன். என்னை குழந்தைபோல் பார்த்துக் கொள்கிறார்கள் என ஜாக்கி ஷ்ரோஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக அறியப்படும் ஜாக்கி ஷ்ரோஃப், தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றார். தற்போது, மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷ்ரோஃப் நடிப்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.