மாஸ் தான்!!!.. துணிக்கடை விளம்பரத்தில் நம்ம ‘நியூஸ் ரீடர்’ ரித்துவின் ‘ராக்கிங்’ நடிப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்யூடியூப் தளத்தில் விதவிதமான நகைச்சுவை வீடியோக்களில், பல கெட்டப்புகளில் நடித்து பிரபலமானவர் ரித்விக்.
சொந்தமாக வீடியோக்களை தயாரித்து, தம்முடைய தந்தையின் இயக்கத்தில் யூடியூப் வீடியோக்களில் சின்ன சின்ன கான்செப்ட் காட்சிகளில் நடித்து வந்த ரித்விக் என்கிற இந்த இரண்டாம் வகுப்பு மாணவனின் நகைச்சுவை வீடியோக்கள் பலருக்கும் பிடித்தமானவை.
10 நிமிடங்களுக்கு குறைவாக இருக்கும் இவரது நகைச்சுவை வீடியோக்களில், இவர் ஆண், பெண், வயதானவர்கள், மருத்துவர் என விதவிதமான கெட்டப்புகளில் நடித்து இருப்பார். மருத்துவத்துறையில் நடக்கும் காமெடிகள், செய்தித் துறையில் நடக்கும் காமெடிகள் என கான்சப்ட் ரீதியாக பல விஷயங்களை எடுத்து நடித்திருக்கும் ரித்விக், அண்மையில் பிரேக்கிங் நியூஸ் என்கிற கான்செப்ட் வீடியோவால் அனைவராலும் ரசிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து ரித்விக், அதிக ரசிகர்களால் பின் தொடரப்பட்டார். இவருடைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இப்படி சமூக வலைதளங்களில் மிக முக்கியமான பிரபலமாக மாறிய ரித்விக், சினிமாவில் எப்போது நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இவருடைய தந்தை உதவி இயக்குனராக இருந்தவர். இந்த லாக்டவுன் நேரத்தில் ரித்விக் கேட்டுக் கொண்டதற்காக யூடியூப் சேனலை நடத்த தொடங்கிய அவரது தந்தை, ரித்விக்கின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு தமது சேனல் உதவியதாக பிஹைண்ட்வுட்ஸின் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரித்விக் தற்போது போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கிறார். சொல்லப்போனால் போத்தீஸ் துணிக்கடை தொடர்பாக அண்மையில் வெளியாகி இருக்கும் தீபாவளியை ஒட்டிய விளம்பரத்தில், ரித்துதான் நாயகன். ஆம், அந்த விளம்பரத்தில் 6,7 பேர் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அனைவருமே ரித்விக்தான் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?.
நடிகர் சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படத்தை ஞாபகமூட்டும் அனைத்து வேடங்களையும் அவரே போட்டுக் கொண்டு, அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக் கொள்வதுபோல், ஒரு வீடியோவில் ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வீடியோவில் போத்தீஸ் தீபாவளி பர்ச்சேஸ் தொடர்பான உரையாடல்கள் நிகழ்கின்றன.
மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும் இந்த வீடியோ ரித்விக்கின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை இணையதளத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து பாராட்டியுள்ளனர்.