இலங்கையைச் சேர்ந்த மூத்த வானொலி அறிவிப்பாளரும், இலங்கைத் தமிழ்த் திரைப்படக் கலைஞருமான எஸ்.நடராஜசிவம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 74.
உடல் நலிவுற்ற நிலையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
இளம் வயதிலேயே ஊடகத் துறைக்குள் நுழைந்தார் நடராஜசிவம். இலங்கை அரசுக்கு சொந்தமான 'ரேடியோ சிலோன்' வானொலி மூலம் பிரபலமான அவர், பின்பு 1980- ஆண்டுகளில் இலங்கை திரைத்துறையிலும் கால் பதித்தார். அதன்பின் சிங்களம் மற்றும் தமிழ் நாடகங்களில் நடித்து வந்தார்.
அவர் நடிப்பில் ''மீண்டும் மீண்டும் நான்" என்ற நாடகம் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. மேலும் பாதை மாறிய பருவங்கள், காதல் கடிதம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், திரிசூல, யுக கினிமத்த, திகவி உள்ளிட்ட சிங்கள மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இலங்கையில் மட்டுமின்றி, உலகிலுள்ள பல தமிழ் ஊடகத் துறையினரை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. தமிழர் மற்றும் சிங்களர் நல்லிணக்கத்தை தன் கலை வாழ்க்கையில் கடைபிடித்த அவரை இலங்கைத் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்களர்களும் ஏற்றுக் கொண்டது அவருக்கு கிடைத்த பேறு.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு அவரது ரசிகர்களும் ஊடகத்துறையினரும் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.. பிரபல அறிவிப்பாளரான அப்துல் ஹமீது தனது இரங்கலை என்னுயிர் நண்பரை இழந்தேன் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்