www.garudabazaar.com

“நான் Sorry சொன்னேனா?”..“அமைச்சர் இந்த உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்!”.. தங்கர் பச்சான் அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடந்த கேள்விக்கான பதிலுரையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இயக்குநர் தங்க பச்சானின் கோரிக்கை குறித்தும் பதிலளித்துள்ளார். அதில் தன் கருத்து குறித்த அவருடைய பதில், மிகவும் தவறானது என்பதை தெரிவித்து அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.

thangar bachchan explanation over minister speech in assembly

இது தொடர்பாக தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 07.08.2021 தேதியன்று முதலமைச்சருக்கு ஒரு குடிமகனாக எனது கோரிக்கையை ஊடகங்களின் வாயிலாக அளித்திருந்தேன். எனது செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே மின்துறை அமைச்சர் என்னிடம் பேசச்சொன்னதாக மின்துறை அதிகாரி ஒருவர் எனது கைப்பேசிக்கு தொடர்புகொண்டு உடனே நேரில் வந்து சந்தித்து விளக்கமளிப்பதாகக் கூறினார்.

நேரில் வந்து விளக்கம் அளிக்கக்கூடிய கோரிக்கை என்னுடையது அல்ல; தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் அளித்திருந்த, அனைத்து மக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் "மாதாந்திர மின்கட்டண முறை" பற்றியதுதான் என தெரிவித்துவிட்டேன்.

Also Read: சந்தானத்தின் கொல மாஸ் "காமெடி படம்"..  ஓடிடி ரிலீஸ் தேதி இதான்... மாஸ் அறிவிப்பு!

அவ்வாறு கூறிய பிறகும் இரண்டுமுறை தனித்தனியாக அதிகாரிகள் மின்கணக்கை சரிபார்த்து விளக்கமளிக்க என் வீட்டிற்கு வந்தனர். மின் கணக்கீடு குறித்த விளக்கம் எனக்குத் தேவையில்லை, முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின்கட்டணம் பற்றிய எனது கோரிக்கைதான் என மீண்டும் கூறினேன். அதனைப் புரிந்துகொண்ட அதிகாரிகள் கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றினை என் கையில் கொடுத்து அதனை படமாக எடுத்துச் சென்றனர்.

அந்தப்படங்கள் சமூக வலைதளங்களில் செய்தியுடன் வெளியாகின. அதன் பிறகும் மின்துறை அமைச்சர் அவருடைய ட்விட்டர் வலைதளத்தில் எனது மின்கணக்கு குறித்து விளக்கம் அளித்து விட்டதாக வெளியிட்டிருந்தார்.

அன்று மாலையே என்னை சந்தித்த அதிகாரிகள் என்னுடன் எடுத்துக்கொண்ட படத்துடன் செய்தி ஒன்றினை வெளியிட்டனர். அச்செய்தியில் நான் கூறியபடியே "எனக்கு விளக்கம் தேவையில்லை, கட்டணமுறை மாற்றம் தான் தேவை" என்பதை தெளிவுடன் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தனர். இச்செய்தி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு சென்று சேரவில்லை என்பதை இன்று ஊடகச்செய்தியாக பார்த்த பின்பே தெரிந்துகொண்டேன்.

நேற்று சட்டமன்றத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களின் மின்துறை பற்றிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் பதிலளிக்கும்போது சமூக வலைதளங்களில், மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக நான் புகார் தெரிவித்ததாகவும் அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கமளித்து விட்டதாகவும் அதன் பின் நான் "சாரி" (வருந்துகிறேன்) எனக் கூறிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான தவறான செய்திகளை நான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

எனது வேண்டுகோளை புகார் எனக்கூறியதுடன், அதிகாரிகள் விளக்கமளித்தவுடன் "சாரி" (வருந்துகிறேன்) என நான் கூறியதாகவும் தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.  அமைச்சருக்கு எழுதித்தந்த அதிகாரிகள்தான் இந்த தவறான, பொய்யான செய்தியை அமைச்சர் அவர்களுக்கு தந்தார்களா? எதனால் என்னுடைய கோரிக்கை இறுதிவரை புரிந்துகொள்ள முடியாமல் போனது என்பதையும் அமைச்சர் அவர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

Also Read: "ஆனந்த கண்ணன் நிறைய பேர் கிட்ட உதவி கேட்டாரு".. கண் கலங்கிய பாடகர் ADK.. Video!

அமைச்சர் அவர்கள் இப்போதாவது உண்மையை புரிந்துகொண்டு, நான் விளக்கம் கேட்டு, வருத்தம் தெரிவிக்கவில்லை எனும் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இவ்வளவு காலம் என்னுடைய கோரிக்கை அமைச்சர் அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் எட்டாமல் இருந்தால் இப்பொழுதாவது ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மின்கட்டணம் மாதந்தோறும் கணக்கெடுக்கப் பட்டிருந்தால் நான் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் பல மடங்கு தொகையை மின்கட்டனமாக செலுத்த வேண்டி இருந்திருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் ஒரு குடிமகனாக  முதலமைச்சர் அவர்களுக்கும், மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; கொரோனா பெருந்தொற்றில் வேலையிழந்து, தொழிலை இழந்து வருமானமின்றி பள்ளி, கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க தவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

அத்துடன் சட்டமன்ற அவைக் குறிப்பில் இடம்பெற்றுவிட்ட என் குறித்த தவறான, பொய்யான பதிவை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான நடவடிக்கையை எடுக்கக்கோரி, இதையே சட்டமன்ற சபாநாயகர் அவர்களுக்கும் எனது கோரிக்கையாக அளிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

thangar bachchan explanation over minister speech in assembly

People looking for online information on Thangar bachchan will find this news story useful.