"நிஜத்தில் ராஜாகண்ணுவோட அக்காவ நிர்வாணமா நிக்க வெச்சு...".. 'ஜெய் பீம்' சுபத்ரா பேட்டி! Video
முகப்பு > சினிமா செய்திகள்ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.
இப்படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடிக்க, அவருடன் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், சுபத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
1990களில் தமிழகத்தின் கடலூர்- விழுப்புரம்-திருச்சி பகுதிகளில் பழங்குடி இருளர் இன இளைஞர்களை சந்தேக திருட்டு கேஸில் பிடித்துச் சென்று விசாரணை என்கிற பெயரில் காவல்துறை செய்யும் மனித உரிமை மீறலை திரைப்படம் காட்டமாக சித்தரித்துள்ளது.
படத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எதிர்காலத்தில் அப்படி யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் அவர்களுக்கான நீதியை, வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, போராடி பெற்றுத்தருவதே படத்தின் கதை. இதில் காவல்துறையினரின் விசாரணை படலத்தில் சிக்கி சித்ரவதைக்குள்ளாகும் இருளர் இன மக்களின் கதாபாத்திரத்தில் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், சுபத்ரா நடித்துள்ளனர்.
குறிப்பாக நடிகர் மணிகண்டனின் அக்காவாக நடிகை சுபத்ரா, பச்சையம்மாள் எனும் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் அந்த கேரக்டர் காவல்துறையினரால் மிகவும் இழிவான முறையில் நடத்தபடுவதும், கொடூரமான முறையில் தாக்கப்படுவதுமான காட்சிகள் பார்வையாளர்களை கண் கலங்க வைத்துள்ளன.
இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து நடிகை சுபத்ரா, பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், “இந்தப் படத்தில் நான் நடிக்கும் ஒரு காட்சியில் புடவையுடன் இருக்கும் என்னை போலீசார் அடித்து இழுத்துச் செல்வார்கள். ஒரு ஜம்ப் இருக்கும். அப்படியே போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தால் புடவை இன்றி பாதி ஆடையில் இருப்பேன். ஆனால் நிஜமான ராஜாக்கண்ணுவின் அக்கா அப்படியல்ல. நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டதாக என்னிடம் கதை சொல்லும் போது குறிப்பிட்டார்கள். இந்த படப்பிடிப்பை நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டு முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த அவுட்புட் கிடைத்திருக்கிறது.
நான் தனிப்பட்ட முறையில் நடித்துள்ளதையும் தாண்டி, டீம் ஒர்க் தான் இதில் முக்கியம். பலரும் கொடுத்த இன்புட் எனக்கு இந்த கேரக்டரில் நடிக்க உதவியாக இருந்தது. இருளர் இன மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எதுவும் பெரிதாக பேசவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்வியலை திரையில் பேச வேண்டும் என்கிற ஏக்கம் அவர்களுடைய கண்களில் தெரிந்தது. நான் நடித்த காட்சிகளை ஒரு இரவு, இரண்டு பகல் என தொடர்ந்து எடுத்தார்கள்.
அந்த சூழலை விட்டு வெளியே வரவில்லை. அப்படி வெளியே வந்த பிறகு இயல்பு நிலைக்கு மனம் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. அந்த அளவுக்கு அந்த கதை என்னை பாதித்தது.
உண்மை சம்பவம் படத்தை விட கொடூரமானது என்று கூறுகிறார்கள். நான் நடித்த 2 காட்சிகள் சென்சாரில் கட் ஆகியுள்ளன. தயாரிப்பாளர் கூட சொல்லும்போது இந்த படத்துல 2 கட் உங்களாலதான் என நகைப்பாக கூறினார். ஜெய்பீம் போன்ற ஒரு சமூக குரலும் எழ வேண்டி இருக்கிறது, அனைவரும் படத்தைப் பார்க்க வேண்டுகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார். சுபத்ரா பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.
"நிஜத்தில் ராஜாகண்ணுவோட அக்காவ நிர்வாணமா நிக்க வெச்சு...".. 'ஜெய் பீம்' சுபத்ரா பேட்டி! VIDEO வீடியோ