www.garudabazaar.com

"தல அஜித் சொன்ன வார்த்தைகள் தான் என்ன ஊக்குவிச்சது!" - 'வேம்புலி' ஜான் கொக்கன் Exclusive பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் ஜான் கொக்கன். நமது Behindwoods தளத்திற்கு அவர் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளையும், தனது வாழ்க்கை அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 

sarpatta parambai vembuli actor john kokken about ajith

சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது?

“முதல்ல இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த பா. ரஞ்சித் சார்க்கு நன்றி சொல்லணும்... இந்த படத்தில் ராமர் ரோல்ல நடிச்ச சந்தோஷ் பிரதாப் கூட நான் ’போலீஸ் டைரி’ வெப்சீரிஸ் நடிச்சேன். அதை வைத்து, அவர் தான் என்ன ரஞ்சித் சாருக்கு பரிந்துரை செய்தார். அப்புறம் ரஞ்சித் சாரை நேரில் சந்தித்தேன். இப்படி தான் எனக்கு இந்த ரோல் அமைந்தது. சந்தோஷ் பிரதாப்பிற்கும் என் நன்றிகள்!”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

இந்திய அளவில் முக்கியமான இயக்குனர் பா. ரஞ்சித் கூட வேலை செய்த அனுபவம் எப்படி  இருந்தது?

“படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகரை கூட சொந்த பேரை சொல்லி கூப்பிட மாட்டார். படத்தோட கதாபாத்திரத்தோடு பேர சொல்லி மட்டும் தான் கூப்பிடுவார்.  ஆர்யா அப்படினா கபிலன்! ஜான் அப்படின்னா வேம்புலி! இப்படி தான் ரஞ்சித் சார் படப்பிடிப்பில் இருப்பார். இந்த படத்துக்காக என்னோட லுக்க மாத்த சொல்லி இருந்தார். அப்புறம் வடசென்னை தமிழ்ல பேச பயிற்சி எடுக்க சொன்னார். நிறைய பேர் என்னிடம் சொல்லி இருந்தாங்க, இந்த படத்துல ரஞ்சித் தான் உங்களுக்குள்ள இருக்கிற நடிகரை வெளியே கொண்டு வந்து இருக்கார் அப்படின்னு அதுக்கு நான் என்னைக்கும் ரஞ்சித் சாருக்கு நன்றி உணர்வுடன் இருப்பேன். நிறைய படங்கள்ல பெரிய முக்கியத்துவம் இருக்காது ஒரு ரெண்டு மூணு சீன் வந்துட்டுப் போற மாதிரி தான் இருக்கும். இந்த படத்தில் தான் எனக்கு முழுமையா நடிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது.”

கபிலன் கதாபாத்திரத்துக்கு முகமது அலி ரெஃபரன்ஸ் இருந்தது வேம்புலி கதாபாத்திரத்தில் நடிக்கிறதுக்கு எதாவது Reference எடுத்தீங்களா ?

“ஆமா ரெஃபரன்ஸ் இருந்தது. மைக் டைசன் தான் வேம்புலி கதாபாத்திரத்திற்கு ரெஃபரன்ஸ். இப்போ படத்துல பாக்குற வெறித்தனமான ஸ்டைல், உடல் மொழி, ஆக்ரோஷம், உடல் அசைவு எல்லாம் மைக் டைசன் ரெபரன்ஸ் தான்.”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

சார்பட்டா படத்தை பார்த்துவிட்டு உண்மையான பாக்ஸிங் வீரர்கள் என்ன சொன்னாங்க. சமீபத்தில் கூட நீங்க சென்னை MMA Academy போயிருந்தீங்க. அவங்க உங்க நடிப்புக்கு என்ன Feedback கொடுத்தாங்க ?

“சென்னை MMA Academyக்கு ஒரு இண்டர்வியூக்கு போயிருந்தேன். படம் பாத்தவங்க நீங்க நிஜமான பாக்ஸரானு கேட்டாங்க, இல்லேனு சொன்னேன், அப்பறம் எத்தனை நாள் பாக்ஸிங் பயிற்சி எடுத்தீங்கனு கேட்டாங்க. இரண்டரை மாதம் பயிற்சி எடுத்தேன்னு சொன்னேன், அகடமில இருந்தவங்க ஷாக் ஆயிட்டாங்க... வெறும் இரண்டரை மாதம் தானானு!”

இந்த படத்தில் உங்கள் குரல் வித்தியாசமா இருந்தது இதுக்கு நீங்க டப் பண்ணிங்களா இல்லை லைவ் ரெக்கார்டிங் பண்ணாங்களா?.

“நான் டப் பண்ணல. டப் பண்ண ஆசைப்பட்டு ஸ்டுடியோ கூட போய் இருந்தேன். ஆனா படத்தோட இணை இயக்குனர் தமிழ் பிரபா இந்த வேம்புலி கதாபாத்திரம் நல்லா வந்திருக்கு. உங்களுக்கு அந்த வட்டார வழக்கு இப்ப சரியா வரல அதனால டப் பண்ண வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாரு. நடிகர் ஹரிஷ் உத்தமன் தான் எனக்கு குரல் கொடுத்திருக்காரு. நான் ஹரிஷ் உத்தமனுக்கு காஃல் பண்ணி பேசினேன் அவர் சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த படத்தை மறுபடியும் பார்க்க போறோம். இப்போ வேம்புலி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்படுவதற்கு அவர் குரலும் மிக முக்கிய காரணம்.”

இந்த படத்துக்கு உடல் எடை எல்லாம் நல்லா கூட்டி இருக்கீங்க உடல் எடையை கூட்டுவது மூலமா ஏற்படும் பிரச்சினைகளை, வலியை எப்படி குணமாக்குனிங்க? அதுமட்டுமில்லாம படப்பிடிப்பு போக தூங்குவதற்கு கொஞ்ச நேரம் தான் கிடைக்கும் அப்படிப்பட்ட சூழலில் உங்க உடல்நிலையை, மனநிலையை எப்படி ரெக்கவர் பண்ணிங்க?

“இந்த படத்துக்கு இரஞ்சித் சார் என் உடல் எடையை கூட்ட சொல்லி இருந்தாரு அதுக்காக நிறைய உடற்பயிற்சி செய்து இருந்தேன். அதுமட்டுமில்லாம உணவு பழக்கவழக்கம் இயற்கை முறையிலதான் கடைப்பிடித்தேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 45 முட்டை சாப்பிட வேண்டிய தேவை இருந்தது. சாமை, கம்பு, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை தான் அதிகமா சாப்பிட்டேன். மனநிலையை ரெக்கவர் பண்ண மிக முக்கிய உதவி செஞ்சது என்னுடைய மனைவி பூஜா. அவங்கதான் என்னை தொடர்ந்து கவனித்து வந்தாங்க.

உடல் வலி போக்கவும் உடல் நிலையை சரியாக வைத்துக் கொள்வதற்கும் நிறைய நண்பர்கள் உதவி செய்தார்கள். சென்னை மயிலாப்பூரில் ஒரு கிரையோ கிளினிக் இருக்கு. அங்க வாரம் ஒரு முறை ட்ரிட்மெண்ட் எடுத்தேன். நிறைய பாக்சிங் பிளேயர்ஸ், கிரிக்கெட் பிளேயர்ஸ் பலரும் தங்களுடைய உடலை ரெக்கவர் பண்றதுக்கு இந்த கிரையோதெரபி கிளினிக்குக்கு தான் வருவாங்க.”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

தமிழ் சினிமாவில் 2010ல் இருந்து நடிக்கிறீங்க. முதல் படம் எப்படி கிடைச்சது?  உங்களோட சினிமாவுக்குள்ள வர்றதுக்கான Struggle எப்படி இருந்தது?

“நான் தமிழ் சினிமாவில் நடிச்ச முதல் படம் தரணி சார் டைரக்ஷனில் ’தபாங்’ இந்தி பட ரீமேக்கான ’ஒஸ்தி’ படம். அந்த படம் சரியா போகல, அதனால என்னோட ரோல் வெளிய தெரியாம போயிடுச்சு. அப்பறம் 4 வருடம் கழித்து 'வீரம்' படத்துல தான் வாய்ப்பு கிடைச்சது.

நடிகரா முதல்ல நடிக்க போகும்போது மலையாள இயக்குனர் ஷ்லீபா வர்கீஸ் தான் ஒரு ஐம்பதுக்கும் மேல  டிவிடிகளை வாங்கி கொடுத்தார். அதுல தமிழ், தெலுங்கு, கன்னடம் என நிறைய படங்கள் இருந்தது. அந்த டிவிடி கலெக்ஷன்ல அஜித் சாரோட 'பில்லா' படத்தை முதலில் பார்த்தேன். அதுக்கப்புறம் 'மங்காத்தா' படம் பார்த்தேன்.”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

“'வீரம்' படத்துக்கு உள்ள நடிக்கப் போகும் போது, அஜித்சார் அப்படின்னா எனக்கு பில்லா, மங்காத்தா தான்.”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

“'வீரம்' பட ஷூட்டிங் டைம்ல அவர் எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தார். சினிமா துறைல எப்படி இருக்கணும். அவர் சொன்ன ஒரே ஒரு விஷயம் எப்பவும் மறக்க மாட்டேன். 'எல்லாம் நேரம்தான் ஜான். நேரம் வரும்! இப்படியே போயிட்டு இருங்க. Focus on Your Dream, வாழ்க்கையில நிறைய ups and downs வரும். அதெல்லாம் கண்டுக்காம முன்னேறிட்டே இருங்கன்னு" சொன்னார்.  அவர் கூட 15 நாள் வீரம் படத்துல ஒர்க் பண்ணேன். அது தான் என்னோட பெரிய Learning Experience.”

“முதல் நாள் 'சர்பட்டா பரம்பரை' படம் பாத்துட்டு என்னோட வேம்புலி கதாபாத்திரத்தை நான் அவருக்கு சமர்ப்பிச்சேன். ஏன்னா அஜித் சார் சொன்ன வார்த்தைகள் தான் என்ன தொடர்ந்து ஊக்குவிச்சது.”

”சினிமா துறைல நடிகனா இருக்குறது ரொம்ப கஷ்டம், நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, நிறையப் படங்களோட ஆடிசன் போகும்போது சின்ன சின்ன ரோல்ஸ் தான் கொடுப்பாங்க. அதுவும் வெறும் ஒரு நாள், அரை நாள் கால்ஷீட்டா தான் இருக்கும். அது மாதிரி ரோல்ஸ் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.”

”அதுக்காக நிறைய பேரு ஏன் எதுக்கு இப்படி நீ சின்ன ரோல்ஸ் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்க? இப்போ இளமையா இருக்க... அதனால வேணாம்னு சொல்லுவ... வயசு ஆயிடுச்சுனா? என்ன பண்ணுவ அப்படியெல்லாம் கேட்டிருக்காங்க.”

“எனக்கு இப்போ 40 வயசு. நிறைய பேர் ஜான் கொக்கன் யாருனு கேட்டு என்னிடமே என்னை கிண்டல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு இப்போ பதில் கிடைச்சுருக்கும்னு நம்புறேன்.”

“சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு எனக்கு இன்னும் நல்ல நல்ல ரோல்ஸ் வரும்னு நம்புறேன். நிறைய பேர் கூட நடிக்க ஆசைப்படுறேன் குறிப்பா ரஜினி சார் கூட, விஜய் சார் கூட, ஜெயம் ரவி சார் கூட நடிக்கணும்னு ஆசைப் படுறேன். நிறைய தமிழ் படம் பண்ணனும்னு ஆசை இருக்கு.”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

அஜித் சார் படம் பற்றி, உங்கள் கதாபாத்திரம் பற்றி என்ன சொன்னார்?

“என்னோட வேம்புலி கதாபாத்திரத்தை அவருக்கு சமர்ப்பிச்சேன். அது வைரலாகிடுச்சு. நிறைய நியூஸ் சேனல்ல அது பத்தி செய்தி வந்துச்சுன்னு ப்ரண்டு ஒருத்தர் சொன்னாரு. அப்போ ஒரு நைட் சூட்டிங்கில் இருந்தேன். அஜித் சார் கிட்ட இருந்து எனக்கு ஒரு போன் வந்துச்சு. தூக்க கலக்கத்தில் போன் பார்த்தேன். அஜித் சார் கிட்ட இருந்து காஃல், உடனே தூக்கம் கலக்கம் டக்குனு போய் சந்தோஷமா போனை எடுத்தேன்.”

”ஹாய் ஜான், How Are You? ஆர் யூ பிஸி?”  என்று அஜித் சார் கேட்டார்.

நான் சார் அப்படி எல்லாம் இல்லை சார்னு சொன்னேன்.

“நான் சார்பட்டா பரம்பரை படம் பற்றி கேள்விப்பட்டேன்.  உங்க கதாபாத்திரம் சிறப்பா வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன். I am So Happy for You, Jhon.  நான் எதுவுமே பண்ணல ஜான் இது எல்லாமே உங்களுடைய உழைப்பு, உங்களோட அர்ப்பணிப்பு. நான் maybe சின்ன அட்வைஸ் மட்டும் தான் கொடுத்தேன். At end of the day it's all yours Jhon. Keep Growing. நீங்க சந்தோஷமா இருக்கணும். இன்னும் நிறைய படம் பண்ணனும் அதான் என் ஆசைனு சொன்னார்.”

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம் ரிலீசாகும் போது அதுக்கு அஜித் சார் விஷ் பண்ணுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது என் வாழ்க்கையில அந்த தருணத்தை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன். ஏன்னா இது ரொம்ப பெரிய விஷயம்!. இதைப்பற்றி பேசும்போது கூட நான் ரொம்ப எமோஷனலா உணர்கிறேன்.”

sarbatta parambai vembuli actor jhon kookan interview about ajith

அடுத்து என்ன படம் எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?

“கன்னடத்தில ’கே.ஜி.எஃப்- 2’, ’கப்ஜா’னு இரண்டு படம் பண்ணிட்டு இருக்கேன்,  தமிழில் இரண்டு முக்கியமான படம் பண்றேன். கூடிய சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.”

 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

sarpatta parambai vembuli actor john kokken about ajith

People looking for online information on Ajith Kumar, John kokkan, Pa Ranjith, Sarpatta Parambarai, Valimai will find this news story useful.