பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங் தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென துப்பாக்கி முனையில் நடிகையை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இயக்குநர் ரித்தேஷ் தாக்கூரின் ‘துலாரி பிடியா’ என்ற படத்தில் ரிது சிங் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வாரணாசி அருகே ராபர்ட்கஞ் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகை ரிது சிங் தனது படக்குழுவினர் 70 பேருடன் தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இரவு 11 மணியளவில் நடிகை ரிது சிங்கின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த பங்கஜ் யாதவ் என்பவர் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்.
துப்பாக்கியுடன் வந்த இளைஞரை பார்த்து நடிகர் ரிது அலறியதும், வெளியே இருந்த அசோக் என்பவர் நடிகையை காப்பாற்ற வந்துள்ளார். ஆனால், அவரை பங்கஜ் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த அசோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு தனது குழுவுடன் சென்ற போலீஸ் அதிகாரி பாட்டீல் பங்கஜுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், பங்கஜ் போலீஸ் அதிகாரியையும் சுட முயற்சித்தபோது, அவரது குழுவினர் பங்கஜை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நீண்ட நாட்களாக நடிகை ரிது சிங்கை பின் தொடர்ந்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்பியதும் தெரியவந்தது. இது தொடர்பாக நடிகை ரிது சிங் மும்பை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.