திரையுலகின் பீஷ்மர் பஞ்சு அருணாசலத்தின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 09, 2019 12:20 PM
எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பஞ்சு அருணாசலம்.கதையுலகின் பிதாமகராகவும், திரையுலகின் பீஷ்மராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம் தனது 75வது வயதில் சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு ஆக.9ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கவியரசர் கண்ணதாசனின் சகோதரர் மகனான பஞ்சு அருணாசலம், பல திரைப்பட பாடல்களையும் எழுதியும், திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவர், 'தென்றல்' பத்திரிகையில், 'அருணன்' என்ற புனைப்பெயரில், தன் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இவர் ‘அன்னக்கிளி’ படத்தை தயாரித்து, இந்திய சினிமாவில் இசைஞானியாக திகழும் இளையராஜாவை திரையுலகில் அறிமுகப்படுத்தினார். ரஜினி, கமல் என, முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களை தயாரித்த பஞ்சு அருணாசலம், சுமார் 48-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
காலத்தினால் அழியாத படைப்புகள் மூலம் அவர் இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நன்னாளில் அவரது புகழ்பெற்ற படைப்புகள் மூலம் அவரை நினைவு கூறுவோம்.