நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
!['Indru Netru Naalai 2' to kick start in September directed by karthic 'Indru Netru Naalai 2' to kick start in September directed by karthic](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/indru-netru-naalai-2-to-kick-start-in-september-directed-by-karthic-photos-pictures-stills.jpg)
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷ்ணு விஷால்,மியா, கருணாகரன், ஜெயபிரகாஷ். டி.எம்.கார்த்திக், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபீஸ் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் இயக்கவிருக்கிறார். இந்த பாகத்தில் ‘மாநகரம்’, ‘நரகாசூரன்’ புகழ் சந்தீப் கிஷன் நடிக்கிறார். சூது கவ்வும் ,காதலும் கடந்துபோகும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் சூட்டிங் வேலைகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என அறிவித்துள்ளனர். 2020 மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர்கள், குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தற்போது 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK14’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.