'காட்டேரி' படம் பற்றிய முக்கிய அறிவிப்பு... கிறிஸ்துமஸுக்கு வெளியாக இருந்த நிலையில் மாற்றம்..!
முகப்பு > சினிமா செய்திகள்'யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் 'காட்டேரி’. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் கோரோனா காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக 'காட்டேரி' திரையரங்குகளில் வெளியாகும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது அதில் " கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவர இருக்கும் “காட்டேரி" திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.