பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா (83) உடல் நலக்குறைவால் காலமானார்.
திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் பரவை முனியம்மா. விக்ரம், விவேக் நடித்த தூள் படத்தில் அவரது நகைச்சுவை நடிப்புக்காக பரவலான கவனம் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்தார். உடல் நலப் பிரச்னைகளால் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார் முனியம்மா.
கடந்த சில மாதங்களாக அவருக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்தது. அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை மதுரையிலுள்ள அவரது வீட்டில் காலமானார்,
அவரது மறைவு திரைத் துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.