“கனவுகளும் கடின உழைப்பும்”: அண்ணாத்த பட இயக்குனர் சிவா-வின் ’பிறந்தநாள்’ ஸ்பெஷல் தொகுப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்தல அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். இன்று சிவா அவர்கள் தனது 44வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். சிறுவயதிலிருந்தே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கத்துக்கான சீட் கிடைக்காததால் ஒளிப்பதிவை தேர்ந்தெடுத்தார். ஒளிப்பதிவு துறையில் கல்லூரி இறுதி ஆண்டில் தங்கப்பதக்கம் வென்றார். மெரிட்டில் ஒளிப்பதிவை தேர்ந்தெடுத்தாலும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அப்படியே இருந்தது.
அதே காலத்தில் அப்போதைய அதிமுக கிணத்துக்கடவு எம்எல்ஏ பழனிச்சாமி அவர்களின் மகன் சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றியும் வகுப்பறையில் நண்பர்களாக, அப்பொழுதே சிவா இயக்குனரானால் வெற்றி தான் அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் என்று முடிவு செய்து வாக்குறுதி கொடுத்துள்ளார். 1997-98 காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரியின் பிலிம் சிட்டியில் வாலி படத்தின் படப்பிடிப்பின்போது தல அஜித்தை இரண்டாவது முறையாக பார்க்கும் வாய்ப்பு. அப்பொழுது இரண்டு நண்பர்களும் தல அஜித்தை வைத்து நிச்சயம் சிவா படம் இயக்க வேண்டும் அதில் ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிய வேண்டும் என்று பேசிக் கொண்டுள்ளனர்.
படிப்பு முடிந்ததும் ஒளிப்பதிவாளராக சிவா, வின்சன்ட் அவர்களிடமும். வெற்றி, சரவணன் அவர்களிடமும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஒளிப்பதிவாளராக இருப்பினும் சிவாவிற்கு இயக்குனர் ஆசை மட்டும் அப்படியே இருந்தது. உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார். குறிப்பாக பத்ரி படத்தில் விஜய் பாக்ஸராக மாறும் அந்தப் பாடல் காட்சி முழுவதும் படம் பிடித்தது இயக்குனர் சிவா தான்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஐவி சசி அவர்களின் ஈ நாடு இநாள் வரே (2001) படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒளிப்பதிவாளர் சிவா அறிமுகமான நாளும் தல அஜித் சினிமா துறைக்கு வந்த நாளும் ஒரே நாளில் தான் ஆகஸ்ட் மாதம் 3 ம் நாள். பின்னர் தமிழில் சார்லி சாப்ளின் (2002) படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ஒளிப்பதிவாளர் சிவாவிற்கு முதல் வெற்றிப் படமாக இது அமைந்தது. பின் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஒளிப்பதிவாளராக பணியாற்றினாலும் இயக்குனர் ஆசை மட்டும் மனதின் ஒரு ஓரத்தில் அடங்கி இருந்தது.
2006-ல் பாஸ் படத்தின் படப்பிடிப்பின்போது சிவா அவர்களைப் பார்த்து நடிகர் நாகர்ஜுனா "நீங்க ஏன் டைரக்டராக கூடாது, எனக்காக ஒரு கதை பண்ணுங்க" என்று இயக்குனர் சிவாவிடம் சொல்ல சும்மா பாராட்டுக்கு சொல்கிறார் என சாதாரணமாக எடுத்துக் கொண்டார். அன்றைய தினமே பாஸ் படத்தின் தயாரிப்பாளர் சிவப்பிரசாத் ரெட்டி இயக்குனர் சிவாவை சந்தித்து "நாகர்ஜுனா சார் சொன்னார் அவருக்காக ஒரு கதை பண்ணுங்க கண்டிப்பா படம் பண்ணலாம்" என்று கூற இம்முறை அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்கனவே அடிமனதில் ஒரு ஓரத்தில் அடங்கி இருந்த இயக்குனர் ஆசை இயக்குனர் சிவாவை திரைக்கதை எழுத தூண்டியது.
ஒரு மாதத்தில் திரைக்கதையை தயார் செய்து கொண்டு நடிகர் நாகார்ஜுனாவை சந்தித்தார் சிவா. பின் சில காரணங்களால் நாகர்ஜூனா அவர்களால் சிவாவின் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இப்பொழுது தான் இயக்குனர் சிவா மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது ஒளிப்பதிவை தொடர்வதா அல்லது இயக்குனராக வேணடி கதை திரைக்கதையை தயார் செய்து ஹீரோக்களை அணுகுவதா என்று. இயக்குனர் சிவா முடிவெடுத்தார், தனது இலட்சியமான திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று. இனி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தார். பல திரைக்கதைகளை வீட்டில் அமர்ந்து எழுதினார். இடையில் மிகப் பெரிய கதாநாயகர்கள் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி தனது இலக்கில் தெளிவாக இருந்தார்.
2006 ல் இருந்து 2008 வரை வருமானம் அறவே கிடையாது. அவ்வப்பொழுது ஒளிப்பதிவாளராக பணியாற்றினால் அதில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்தலாம் என்று மனதில் தோன்றும். ஆனால் இலக்கு மாறிவிடும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் பணிகளை மேற்கொள்ளவில்லை. அந்த இரண்டு வருடங்கள் என்பது என்னுடைய சோதனையான காலகட்டம் என்று இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பின்னர் இயக்குனர் சிவா நடிகர் கோபிசந்த் உடன் தனது முதல் படமான சௌரியம் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட் பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. தமிழில் கூட விஷால் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெடி என மறு உருவாக்கம் செய்யப்பட்டது. சிவா கடைசியாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாஸ் படம் வெளியானது 27 செப்டம்பர் 2006. முதல்முறையாக இயக்குனராக பணியாற்றிய சௌரியம் படம் வெளியானது 25 செப்டம்பர் 2008. பின்னர் மீண்டும் நடிகர் கோபிசந்த் உடன் இணைந்த சங்கம் (2009) படமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக தனது கல்லூரி கால நண்பரான வெற்றியையே சிவா தேர்ந்தெடுத்தார். நண்பனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார்.
தெலுங்கில் வெற்றி பெற்ற கையோடு தமிழில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அழைக்க சிறுத்தை படத்தை இயக்கினார். 2011 பொங்கலுக்கு வெளிவந்த இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. மீண்டும் தெலுங்கில் ரவி தேஜாவை வைத்து எடுத்த தருவு (2012) ஹிட் அடித்தது.
இதே 2011 காலகட்டத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம் பண்ணுவதற்காக தல அஜித் ஒப்பந்தமானார். பில்லா 2, ஆரம்பம் படங்களை முடித்துக்கொண்டு விஜயா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடிக்க ஆயத்தமானார். முதலில் இயக்குனராக ஏ எல் விஜய் தேர்வு செய்யப்பட்டார் ஆனால் தாண்டவம் படம் முடியாத காரணத்தினால் அவரால் தல அஜித்துடன் உடனே படம் பண்ண முடியவில்லை. தல அஜித்தும் அப்போதுதான் ஆரம்பம் படத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் காலில் அறுவை சிகிச்சை முடித்துக் கொண்டு இருந்த நேரம். மூன்று வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் என்பதால் படத்தை விரைவாக முடிக்கவும் படத்தை வெற்றிப்படமாக ஆக்கவும் அஜித் குறிக்கோளாக இருந்தார்.
அப்போது அஜித் ஒரு வார பத்திரிகையில் பேட்டி அளித்திருந்தார்.அதில் "நான் வளரும் காலக்கட்டத்தில் விஜயா, ஏவிஎம், சத்யஜோதி போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் என்னை வைத்து எப்போது படம் பண்ணுவார்கள் என்று ஆவலோடு இருப்பேன். அதற்கான காலகட்டம் இது தான்" என்று பேட்டி கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு விஜயா புரோடக்சன்ஸ் மீது அஜித் மரியாதை வைத்திருந்தார். விஜயா புரொடக்ஷன்ஸின் நிறுவனர் நாகி ரெட்டியின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீரம் படம் தயாரானது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அஜித் எப்பொழுதும் ஒரு படத்தை முடித்த பின்னரே இன்னொரு படத்தை ஆரம்பிப்பார். வீரம் படம் மட்டும் இதில் விதிவிலக்கு. ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பேட்ச் ஒர்க் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. முதலில் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி பின்னர் அஜித்தின் 45 நாள் கால்ஷீட்டில் மொத்த படத்தையும் முடித்துவிட்டார். 2013 தீபாவளிக்கு ஆரம்பம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடுத்த 70 நாட்களில் 2014 பொங்கலுக்கு வீரம் வெளியாகி மெகா ஹிட். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை குவித்த படங்களில் பட்டியலை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் 2015 ம் ஆண்டு கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டது. அதில் தமிழக சினிமாவில் அந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் முதலிடம் லிங்கா விற்கும் இரண்டாவது இடம் வீரம் திரைப்படத்திற்கும் மூன்றாவது இடம் கத்தி திரைப்படத்திற்கு அளிக்கப்பட்டது.
வீரம் படப்பிடிப்பின் போது இயக்குனர் சிவாவின் உழைப்பு, படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்களின் மீதான அணுகு முறை ஆகியவற்றை கண்ட தல அஜித், நாம் சேர்ந்து பல படங்கள் செய்வோம் என கூறி மீண்டும் வழங்கிய வாய்ப்பே வேதாளம். 2015 தீபாவளிக்கு வெளியானது வேதாளம். ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து நவம்பர் மாதம் வெளியானது. அதற்கு முன்பு வரை இருந்த தமிழ் சினிமாவின் ஓபனிங் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் அனைத்தையும் வேதாளம் முறியடித்தது. அதிகபட்ச ஷேர் கொடுத்த திரைப்படமாகவும் அது அமைந்தது. சென்னை வெள்ளத்தையும் கடந்து ஓடியது.
தல அஜித் இயக்குனர் சிவா மூன்றாவது முறையாக இணைந்த விவேகம் கலவையான விமர்சனம் பெற்றது. அஜித் சிவா கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்தது. 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்த திரைப்படமாக தமிழகத்தில் விஸ்வாசம் அமைந்தது. உலகெங்கிலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு இலட்சியம் இருக்கும், அதிலும் தமிழ் சினிமா கமர்சியல் இயக்குனர்களின் உச்ச இலக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒரு படமாவது இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதே அது. ரஜினி அவர்களின் ரசிகரான இயக்குனர் சிவாவிற்கும் அந்த ஆசை விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நிறைவேறி உள்ளது. தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் "அண்ணாத்த" படத்தை இயக்கி வருகிறார். தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளிவருகிறது.
முதலில் சொன்னது போல் வாலி பட சூட்டிங்கை வேடிக்கை பார்த்த மாணவர்கள் ஒரு நாள் அஜித் சாரை வைத்து படம் இயக்குவேன் அப்படி நான் படம் இயக்கும் போது நீதான் அந்த படத்தின் கேமரா மேன் என்று நண்பன் வெற்றியிடம் கூறியதை உண்மையாக்கி தல அஜித்தை வைத்து 1 அல்ல 4 படங்கள் இயக்கி நண்பனுக்கு சொன்ன வாக்கை உண்மையாக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா.
எண்ணம் போல் வாழ்க்கை ❤️
இனிய 44-ஆம் பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா சார்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Breaking Update From Superstar Rajinikanth And Siva’s Annaatthe
- Rajinikanth Siruthai Siva Annaatthe Shoot Next In Lucknow
- Thala Ajithkumar Vivegam Movie Super Hit Status
- Popular Hero Confirms His Presence In Rajinikanth’s Annaatthe; Gives An Official Update Ft Bala
- Superstar Rajinikantha Annatthe Movie Next Update
- Here’s The Real Truth Behind Superstar Rajinikanth’s Thalaivar 169 Director Ft Desingh Periyasamy
- Rajinikanth's Annaatthe FIRST LOOK To Be Released On This Special Day
- Superstar Rajinikanth's Annaatthe Update Is Here - Viral Pics
- Wow! Superstar Rajinikanth And Wife Wishes This Popular Actress For Her Tamil Debut
- Rajinikanth Darbar Movie Running Success Fully At Japan
- Superstar Rajinikanth's Annaatthe Chennai Plan Revealed Ft Siva, Nayanthara, Keerthy Suresh, Khushbu
- Popular Tamil Heroine Regrets Not Being Able To Act With Rajinikanth In This Movie
தொடர்புடைய இணைப்புகள்
- 'துப்பாக்கி'யுடன் தல அஜித்😎- வேற மாறி வீடியோ🔥..! கொண்டாடும் ரசிகர்கள் |Thala Ajith | Gun Shooting
- Theatre La Endha Padatha Pakarthuku Neenga Waiting? 😍🔥#Valimai #Beast #Annatthe #Vikram #Theatre
- Thalaivaa Vera Level😍😂
- Semma 💥🔥👌
- நான் Director-அ ன்னு கேட்டாரு... கேப்டனுக்கு பெரிய அடி... | RK Selvamani Reveals
- மாமன்னன் சிவாஜி வழிபட்ட கோயில்! | Behindwoods Om
- அசப்புல பார்க்க அப்படியே Thala மாதிரியே இருக்காரு, Viral Video🔥
- Neelambari 😎🔥
- 'திமுகவை புகழ்ந்து பேசிய SV சேகர்'..ஆட்சி மீது விமர்சனமே தேவையில்லை | CM STALIN | SV SHEKAR
- "நாங்க தான் உண்மையான பாகவதர் குடும்பம்..! இந்தாங்க Proof ..!" - MKT பாகவதர் Family பேட்டி..!
- "நொந்து போயிட்டோம்! நடுக்கடலில் தள்ளி விட்ட மாதிரி இருக்கு" - கலங்கும் ரஜினி ஆதரவாளர் பேட்டி
- "அண்ணாத்த படத்துக்காக வெளியே வந்தாரா ரஜினி?" - கொதிக்கும் ரசிகர்கள்!