Jango Others
www.garudabazaar.com

ஜெய்பீம்: “இத செஞ்சிருந்தா அன்றே முடிந்திருக்கும்!” - பாரதிராஜாவுக்கு அன்புமணி கடிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் பழங்குடி இருளர் இன மக்கள் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறல் குறித்து பேசியது.

Anbumani reacts to Bharathiraja letter over jaibhim issue

ஒரு பக்கம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் இத்திரைப்படத்தில் இருந்த காலண்டர் குறியீடு, பெயர் சர்ச்சை, உண்மைக் கதைக்கும் திரைப்படத்துக்குமான முரண் என பல்வேறு விஷயங்கள் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது கேள்விகளுடன் கூடிய கண்டனங்களை முன்வைத்தார்.

அக்கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் அளித்த நடிகர் சூர்யா, குறிப்பிட்ட குறியீடுகள் நீக்கம் பெற்றுவிட்டதாகவும், அதே பெயர் அரசியலுக்குள் படைப்பை சுருக்க வேண்டாம் என்றும் படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் கருத்தை வழிமொழிந்து தங்களது கருத்துக்களை அன்புமணி ராமதாஸ்க்கு கடிதமாக எழுதியிருந்தனர். அந்த வகையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தமது அறிக்கையை முன்வைத்திருந்தார்.

அதில் இயக்குநர் பாரதிராஜா, “எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன்.” என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தற்போது பதில் அளித்திருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதிப் பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. ஜெய்பீம் திரைப்படத்தில் சாதிவெறி பிடித்த, கொடுமைக்கார, சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னிக் குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட முத்துராம லிங்கத்தேவரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலையின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்திருப்பீர்களா?” என்று கேட்டுள்ளார். 

மேலும் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில், “வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்புச் சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தைத் தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா?

சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்? அண்மையில் வெளியான ‘கர்ணன்’ படத்தில் 1997ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன்,  ‘எலி வேட்டை’ என்ற பெயரில் படத்தைத் தொடங்கி, தயாரித்து முடிக்கும் தருவாயில் பரபரப்புக்காக ’ஜெய்பீம்’ ஆக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்,  “கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும்போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னிக் குண்டத்தை கொலையாளியின் வீட்டில் நட்ட நடுவில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, “இது வெறும் காலண்டர்தானே, என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னிக் குண்டத்தை அங்கு வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. கோடிக்கணக்கான வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை ஆழமாகப் புண்படுத்தி விட்டீர்கள் என்று ஏன் உங்களாலும் எங்களை விமர்சனம் செய்கின்ற அவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்று கேட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதனால் அவர்களின் மனங்கள் காயப்பட்டிருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி நான் கடிதம் எழுதியபோது, உண்மையை ஒப்புக்கொண்டு வன்னிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகப் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Anbumani reacts to Bharathiraja letter over jaibhim issue

People looking for online information on Anbumani Ramadoss, Bharathiraja, Jai Bhim, Suriya will find this news story useful.