தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், காமக் கொடூரர்களின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.
இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து ,அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.
இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம்,அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.
அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நம்மை வழி நடத்துவதில் நம் பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை ..!அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.’ என கூறப்பட்டுள்ளது.