‘புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்’.. 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 11, 2019 11:43 AM

எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Four Indians killed in Ethiopia plane crash

எத்தியோப்பியா உள்ள அடிஸ் அபாபா என்னும் நகரில் இருந்து கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு நேற்று எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது. இதனை அடுத்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு என்னும் பகுதியில் பறந்து கொண்டிருக்கும் போது விமான விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள், வைத்யா ஹன்சின் அனகேஷ், வைத்யா பனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க். இதில் ஷிகா கார்க் என்பவர் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகராக இருந்துள்ளார். இவர் நைரோபியாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது எதிர்பாராத விதமாக நடந்த இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஷிகா கார்க் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவருக்கு தெரிவிக்க முயற்சித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விபத்தில் பலியான மற்றொருவரான நுகவரப்பு மனிஷா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்ற இருவர் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Tags : #ETHIOPIA #ETHIOPIANAIRLINECRASH #SUSHMASWARAJ #BIZARRE