‘ஒரு தப்பும் பண்ணாத எம் மகன்.. கோர்ட்டில் திருநாவுக்கரசின் அம்மா ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 12, 2019 04:34 PM
கல்லூரி பெண்களை பேஸ்புக் மூலம் தங்கள் வலையில் வீழ்த்தி, ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்துவந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பில் இருந்தும் இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டதும், இன்னொரு குற்றவாளி பார் நாகராஜன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டு பலாத்கார வழக்கில் கடந்த 6-ம் தேதி பொள்ளாச்சி முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், (கைது செய்யப்பட்ட) திருநாவுக்கரசின் தாயார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நீதிபதி ஆறுமுகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்தபோது, அரசு வழக்கறிஞர் தரப்பிலும் திருநாவுக்கரசின் தாயார் தரப்பிலும் வாதங்கள் நிகழ்ந்தன.
இதன் முடிவில், திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களின் செல்போன் ஆடியோக்களும் வீடியோக்களும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவை வந்த பிறகே விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கிடையில் ஜாமின் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வாய்ப்புண்டு என்பதாலும் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசுவுக்கு ஜாமின் மறுக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் திருநாவுக்கரசுவின் தாய் அங்கிருந்த வழக்கறிஞர் மற்றும் பொதுமக்களிடம் ஆவேசமாகப் பேசியதாகவும் எந்தத் தவறும் செய்யாத தன் மகன் திருநாவுக்கரசு துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் பேசியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளது.