'பொண்ணோட பெயர'...எப்படிங்க நீங்களே வெளிய சொல்லலாம்'?...என்ன பயம் காட்டுறீங்களா?

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 15, 2019 11:08 AM

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் பெயர் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இடம் பெற்றிருப்பது கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

TN Gov reveals the identity of the girl who unveiled the Pollachi Case

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கினை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டது.அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில்,பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தது.இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஏற்கனவே புகார் அளித்த பெண்ணின் விவரங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,அது தவறுதலாக நிகழ்ந்து விட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசின் இந்த செயலிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ''பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை, பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு மீறியுள்ளது.இது அப்பட்டமான விதிமீறல் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி யாரும் புகார் தராமல் இருப்பதற்கான மறைமுகமான அச்சுறுத்தல் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி தொடர்ந்து கபட நாடகம் ஆடுவதாகவும் ஸ்டாலின் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.''பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவுக்கு தொடர்பில்லை என காட்டும் வேகத்தை,குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்வதில் ஏன் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சியினை சேர்ந்த தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.