உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா ?.. வெளியான இரண்டு முக்கிய முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Selvakumar | Feb 22, 2019 05:10 PM
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து இன்று டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா விளையாடக்கூடாது என பலரும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்றால் உலகக்கோப்பையில் இந்தியா 2 புள்ளிகளை இழக்க நேரிடும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ‘பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம். அடுத்து தீவிரவாத தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இனிமேல் நேரடி போட்டிகளை திட்டமிட வேண்டாம்’ என்பன போன்ற இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் வரவுள்ள ஐபிஎல் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறாது எனவும், அதற்கு செலவாகும் பணத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
