'ஜட்ஜ் ஐயா நடவடிக்கை எடுங்க'...கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான்...உங்க வேலைய பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 12, 2019 10:07 AM
வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக,ராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மீது,நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பாகிஸ்தானிற்கு ஐசிசி சரியான பதிலடியை கொடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.இரு அணிகளும் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியானது ராஞ்சியில் நடைபெற்றது.அப்போது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், வழக்கமான தொப்பிக்கு பதிலாக ராணுவ வீரர்கள் அணியும் சிறப்பு தொப்பி போன்ற ஒரு தொப்பியினை அணிந்து விளையாடினர்.
இதனை போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக,இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் முன்னாள் கேப்டன் தோனி இந்திய வீரர்கள்,அணி நிர்வாகிகள்,கிரிக்கெட் வாரிய சிறப்பு பணியாளர்களுக்கு வழங்கினார்.அதோடு நிற்காமல் அன்றைய போட்டிக்கான சம்பளத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும்,அவர்கள் குழந்தைகளின் எதிர்கால படிப்பு செலவிற்காகவும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாகிஸ்தான்,'கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு,ஆனால் இந்தியா அதில் அரசியலை புகுத்த நினைக்கிறது என கடுமையாக குற்றம் சாட்டியது.மேலும் இந்த விவகாரத்தில் ஐசிசி தகுந்த நடவடிக்கையினை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தது.
இதனிடையே பாகிஸ்தானின் கருத்துக்கு ஐசிசி தனது விளக்கத்தை அளித்துள்ளது.அதில் ''வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும்,அவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டுவதற்காகவும் ராணுவ தொப்பி போன்ற சிறப்பு தொப்பியினை அணிந்து விளையாட இந்திய அணி ஐசிசியிடம் அனுமதி கேட்டது.அதற்கு ஐசிசி சார்பில் அனுமதியும் வழங்கப்பட்டது.எனவே இதில் இந்திய அணி எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.