‘பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி’.. நெகிழ வைத்த விஞ்ஞானி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 04, 2019 06:47 PM

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிவாரண நிதி கொடுக்கப் போவதாக மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

Murtaza A Hamid donate Rs 110 crore to the pulwama attack martyrs

கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி புல்வாமா பகுதியில் துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவதிகளின் முகாம் மீது குண்டு மழை பொழிந்தது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரூ.110 கோடியை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்கிற பகுதியை சேர்ந்தவர் முர்தாசா ஹமீது. இவர் பார்வை குறைபாடு உள்ளவர். 44 வயதான இவர், ராஜஸ்தான் மாநிலம் அரசு வர்த்தகக் கல்லூரியில் பட்டம் பெற்று, மும்பையில் ஆராய்ச்சியாளாராக உள்ளார். புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடியை நிவாரண நிதியாக அளிக்க முன்வந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து கொடுக்க நினைத்த இவர், இது தொடர்பாக மத்திய அரசுக்கு இ-மெயில் மூலமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் முர்தாசா ஹமீது, நாட்டுக்காக நம் மண்ணில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதவும் எண்ணம் அனைத்து குடிமகன்களுக்கும் உள்ளது என தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள இவர்  ‘Fuel Burn Radiation Technology’ என்னும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளாதாக கூறுகிறார். தனது அறிவியல் கண்டுபிடிப்பை சரியான நேரத்தில் அரசு அங்கீகரித்திருந்தால், புல்வாமா போன்ற சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என முர்தாசா ஹமீது தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஜிபிஎஸ், கேமரா உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் ஒரு வாகனத்தையோ அல்லது பொருளையோ கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை 2016 -ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு இலவசமாக வழங்க அறிவித்தும், 2018 -ஆம் ஆண்டுதான் அரசு அதற்கு ஒப்புதல் கொடுத்ததாக ஆராய்ச்சியாளர் முர்தாசா ஹமீது தெரிவித்துள்ளார்.

Tags : #PULWAMAMARTYRS #KOTA #MURTAZAAHAMID #SCIENTIST #FUND