40 ரூபாய்க்காக உடன் பிறந்த அண்ணனை சுத்தியலால் அடித்துக்கொன்ற சிறுவன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Feb 27, 2019 11:29 AM
மகாராஷ்டிராவில் 40 ரூபாய்க்காக சிறுவன் ஒருவன் தன் அண்ணனை சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோர் மற்றும் அண்ணனுடன் வாழ்ந்து வந்துள்ளான். ஆனால் சிறுவனின் அண்ணன் சிறுவனை விட 1 மணி நேரம் முந்தி பிறந்ததால் பெரியவனாக பார்க்கப்படுகிறான். இதுநாள் வரை சிறுவனின் குடும்பமும் இவ்வாறே இந்த அண்ணன் தம்பியை நடத்தி வந்துள்ளது.
அதே சமயம் சிறுவனுக்கு தன் பெற்றோர்களும் உறவுகளும் தன்னை விட 1 மணி நேரம் முந்திப் பிறந்த தன் அண்ணனின் மீது பாசம் வைத்து தன்னை புறக்கணிப்பதாக எண்ணம் தோன்றியுள்ளது. இதனால் தன் அண்ணனிடம் எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டை போட்டுள்ளான்.
இப்படி ஒரு சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தங்கள் பெற்றோர் கைச்செலவுக்காக கொடுத்த 40 ரூபாய்க்காக அண்ணன் தம்பி இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி, பலவருட கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு தன் அண்ணன் தூங்கும்போது அவனது தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்துக் கொன்றுள்ளான். அதன் பின்னர் போலீஸார் வந்து விசாரணை செய்கையில் தன் அண்ணனின் மீதான பல வருட கோபத்தை சிறுவன் போலீஸாரிடம் கூறியதோடு, தான் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளான்.
பின்னர் போலீஸார் சிறுவனின் அண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 40 ரூபாய் சண்டைக்காக உடன் பிறந்த அண்ணனை சுத்தியலால் அடித்து, தம்பியே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
