‘எங்கள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நிகழ்த்தியது’..உறுதி செய்த மசூத் அசாரின் சகோதரர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 03, 2019 03:23 PM
புல்வாமா தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட இந்திய துணை நிலை ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
பின்னர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாமிட்டிருந்த பகுதியில் இந்திய ராணுவம் இறங்கி அதிரடி தாக்குதல் நிகழ்த்தி சுமார் 300 பயங்கரவாதிகளை அழித்ததாக இந்தியா தெரிவித்தது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல் இந்தியர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நேரத்தில்தான் இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
முன்னதாக புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், தங்கள் நாட்டில்தான் இருக்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதிப்படுத்தியதோடு, மசூத் அசாருக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், மசூத் அசாருக்கு எதிரான ஆதாரங்களை இந்திய ராணுவம் அளித்தால் நங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவரை போர்க்குற்றவாளியாக பாவித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார்.இப்படி ஒரு சூழலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அமர் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதில், ‘காஷ்மீர் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் எங்கள் அமைப்பின் மீது இந்திய விமானப்படை குண்டு வீசியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான எங்கள் ஜிகாத்தைத் தொடங்குவது உறுதியாகியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது இந்தியா தாக்குதல் நிகழ்த்தியது அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவராலேயே நிரூபணமாகியுள்ளது.