கெஜ்ரிவாலுடன் சந்திப்பு: ‘இதில் அரசியல் இல்லை என சொல்லிவிட முடியாது!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 26, 2019 07:16 PM

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நாள் சமீபத்தில் மிக விமர்சியாக அக்கட்சியினரால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Makkal Neethi Maiam Party leader kamalhaasan meets Arvind Kejriwal

அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் கொடி ஏற்றி வைக்கப்பட்டு விட்டது. ‘அடுத்து எங்கு கொடி ஏற்றி வைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்’ என்று மக்களிடம் சூசகமாக தனக்கு வாக்களிக்க வேண்டும் என கோரினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய துணைநிலை ராணுவ வீரர்கள் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்து இந்திய ராணுவ படை பதில் தாக்குதலை இன்று நடத்தியதற்கு கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.‌ இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மரியாதை நிமித்தமாக டெல்லியில்  சந்தித்திருக்கிறார்.‌

பரபரப்பான அரசியல் சூழலில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம், நாங்கள் தனித்து நிற்போம் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

முன்னதாக கமல்ஹாசன் கட்சி தொடங்கும் முன், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் அனுபவம் மிக்கவர்களுடன் நேரடி சந்திப்பில் ஈடுபட்டு ஆலோசனை கேட்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்திருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து கூறிய கமல், ‘மக்களவை தேர்தலில் கூட்டணிக்காக எல்லோரிடமும் கைகுலுக்க முடியாது. ஆனால் கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறிவிட முடியாது’ என்று கூறினார். மேலும் தமிழகத்தில்  ‘நாங்கள் தான் ஏ டீம்; நாங்கள் தான் வெற்றி பெறுவோம்’ என்று பேசியுள்ளார். 

Tags : #KAMALHAASAN #ARVINDRAKEJRIWAL #MAKKALNEETHIMAIAM