‘15,000 விவசாயிகளிடம் இருந்து கடன் வசூலிக்க வங்கிகளுக்கு தடை’ .. கேரள அரசு அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 06, 2019 02:05 PM

கடந்த வருடம் ஜீலை முதல் ஆகஸ்ட் வரை, வெள்ளத்தில் மிதந்து கேரளாவே தத்தளித்தது நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Kerala Govt advises banks to extend loan pay period of farmers

அப்போது கேரளாவில் பெய்த கனமழையால் மண்சரிவுகள், சாலைகளிலும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்த நிலை என கேரளாவின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.  அதில் இருந்து கேரளா மீள்வதற்கே பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் மெல்லத் தேறிவந்தாலும், விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டேர் அளவில் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் கேரள விவசாயிகள் சுமார் 15 ஆயிரம் பேர் வாங்கிய கடன்களை வசூலிக்க பொத்துறை மற்றும் தனியார் வங்கிகள் முடிவெடுத்தன.  இதற்கு கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டிவரும் சூழலில் கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் இருந்து கடனை உடனடியாக வசூலிக்க வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டும் இந்த தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டுவர, அவர்களுக்கு கேரள அரசின் இந்த நிதியாண்டில் ரூபாய் 85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.