தாயகம் வந்தடைந்த அபிநந்தன்:புல்வாமா முதல் வாகா வரை.. ‘தனி ஒருவன்’ ஹீரோவான கதை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 01, 2019 12:14 PM

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஊரே காதலர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது காஷ்மீரின் மீது காதல் கொண்ட அமைப்பு, இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய பகுதியான புல்வாமாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது.  CRPF என்று சொல்லப்படுகிற இந்திய துணை நிலை ராணுவ அதிகாரிகள் வந்த பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 40 லிருந்து 44 பேர் வரை பலியாகினர்.

IAF pilot Abhinanadan Varthaman full story from pulwama to Wagah

இதற்கு பாகிஸ்தான் அரசு மீது இந்தியா குற்றம் சாட்டியது. இந்திய பிரபலங்கள், அரசியலாளர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள் என பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர்.  ஆனால் பாகிஸ்தானோ இந்தியாவின் குற்றச் சாட்டை மறுத்து வந்தது. இதனிடையே பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் இந்திய படையால் தாக்கப்பட்டு தவிடுபொடியானதாக இந்திய ராணுவம் அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் அத்துமீறியதால், அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இந்தியா தெரிவித்தது.

அதனையும் மறுத்த பாகிஸ்தான், தங்கள் நாட்டு எல்லையில் இந்திய விமானங்கள் அத்துமீறியதாகவும் அதைச் சுட்டுவீழ்த்தியதாகவும் இரண்டு வீரர்கள் பிடிபட்டனர் எனவும் கூறியது. ஆனால் இந்தியாவின் தரப்பில் MIG ரக போர் விமானமும், ஒரே ஒரு ராணுவ விமானியும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கொஞ்ச நேரத்திலேயே பாகிஸ்தான் தனது அரசின் அதிகாரபூர்வமான ட்விட்டர் தளத்தில் இந்திய விமான ராணுவ வீரர் அபிநந்தன் தங்களிடம் பிடிபட்டதாகவும், ஆனால் அவரது விமானம் நொறுங்கியதாகவும் வீடியோ வெளியிட்டது. பின்னர் அவரை அந்நாட்டு மக்கள் அடிப்பதில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் மீட்ட வீடியோவில் காயங்களுடன் அபிநந்தன் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோவும் வெளியானது. அப்போது அபிநந்தன், ‘நான் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம்தான் இருக்கிறேனா?’ என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

அதற்கும் பிறகுதான் அபிநந்தன் காபி குடித்தபடி தன்னுடைய பெயர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விபரங்களை மட்டும் கூறுவதுபோலவும், நாட்டைப் பற்றிய மற்ற விபரங்களை தான் சொல்வதற்கில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் கூறுவதுபோலவுமான வீடியோ வெளியானது. அதன் பின்னர் அபிநந்தன் பற்றிய அலை இந்தியா முழுவதும் பரவியது. தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் டெல்லியில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், அவரது தந்தையும் சென்னையில் வசித்து வரும் ராணுவ அதிகாரி என்றும் அறியப்பட்டது. ஆனால் அபிநந்தனின் பாதுகாப்பு கருதி அவர் பற்றிய 11 வீடியோக்களை அகற்ற யூ டியூபுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனிடையே பாகிஸ்தானின் லாஹூரில் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி அந்நாட்டு பத்திரிகையாளர்கள் சிலர் போராட்டம் செய்தனர்.

இடையில் அபிநந்தனைப் போலவே பல வருடங்களுக்கு முன்னர் கார்கில் போரில் பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்ட ராணுவ அதிகாரி நச்சிகேட்டா தனது மோசமான அனுபவங்களை பகிர்ந்ததோடு, அபிநந்தன் துணிச்சலான வீரர் என்று புகழவும் செய்தார். அதே போல் போர்க்கைதி ஒருவரை இன்னொரு நாடு துன்புறுத்தாமல், மருத்துவ சிகிச்சை அளித்து 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்கிற ஜெனீவா ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதியையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டிய அவசியத்தையும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி அழுத்தம் தரத் தொடங்கின.

இப்படி ஒரு சூழலில்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னரே இம்ரான் கான் போரில் உடன்பாடில்லை என்றும், தான் இந்திய பிரதமரிடம் பேச தயார் என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக சென்னையில் இருந்து அபிநந்தனின் பெற்றோர்கள் மகனை தங்கள் வசம் மீட்க, விமானம் வழியாக அமிர்தசரஸுக்குச் சென்றனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மரியாதையாக வரவேற்று வணக்கம் செலுத்திய வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில் இன்று அபிநந்தனை ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் லாகூருக்கு அழைத்துவந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு கொண்டுவந்து ஒப்படைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஷா குரேஷி ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் வாகா எல்லையில் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் பலரும் இந்திய தேசியக்கொடியுடன் வாகா எல்லையில் 'WelcomeHomeAbhi' என்கிற பதாகைகளை ஏந்தியபடி காத்திருக்க தொடங்கினர்.

பின்னர் வீரர்கள் புடைசூழ அழைத்துவரப்பட்ட அபிநந்தன், இந்திய ராணுவத்தினரிடம் இரவு 9 மணி அளவில் அட்டாரி- வாகா எல்லையின் வழியாக அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டார். ராணுவ துணை விமான அதிகாரி ஆர்ஜிகே கபூர் தங்களிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகவும், விமானத்தில் இருந்து விழுந்ததால் அவருக்கு முதற்கட்டமாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்ததோடு, அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதால் இந்திய ராணுவ விமானத்துறை மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.  

Tags : #ABHINANADANVARTHAMAN #SHAH MAHMOOD QURESHI #WAGAHBORDER #AIRSURGICALSTRIKES #ABHINANDANCOMINGBACK #ABHINANDANRETURNS