'கொரோனா தடுப்பூசியிலுமா இந்த வேலையை காட்டுறீங்க'... நொந்துபோன உலக சுகாதார நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனாம் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே அதற்குத் தீர்வாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகம் முழுவதும், நிறவெறி அபாயமும் - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் எழுந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனாம் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ''நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் அப்படியானவொரு மோசமான நிலைப்பாட்டில் இருக்கிறது. தரவுகளுடன் சொல்லவேண்டுமென்றால், உலகில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில், 45 சதவிகித தடுப்பூசியை உலகில் 15 சதவிகித மக்களை மட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கும் பணக்கார நாடுகள் வைத்துள்ளன.
மக்கள் தொகையில் 50 சதவிகித மக்களைகொண்டிருக்கும் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகளுக்கு 17 சதவிகித தடுப்பூசிகளே கிடைத்துள்ளது" என வேதனை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த பேதங்களுக்கான காரணமாக 'தடுப்பூசியைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளாமல் பணக்கார நாடுகள் செயல்படுகின்றன' என உலக சுகாதார நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ''நிறையப் பணக்கார நாடுகள், தங்களின் நாட்டிலுள்ள குழந்தைகள், பருவ வயதினருக்குத் தடுப்பூசி விநியோகிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் பல ஏழை – பின்தங்கிய நடுத்தர வர்க்க நாடுகள், தங்கள் நாட்டில் கொரோனா ஆபத்து அதிகமிருக்கும் நபர்களான முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்குக்கூடத் தடுப்பூசி விநியோகிக்காமல் இருக்கிறது. இப்படி நாடுகளுக்கு இடையே நிலவும் தடுப்பூசி வேறுபாடு, வேதனை தருகிறது'' எனத் தனது வேதனையை வெளிக்காட்டியுள்ளார் டெட்ராஸ் அதேனாம்.
முன்னதாக அடுத்த ஆறு வாரத்தில் 80 மில்லியன் கொரோனா தடுப்பூசியை உலக்க நாடுகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென அமெரிக்க அதிபர் பைடன் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.