மூணு வருசத்துக்கு முன்னாடி.. காணாமல் போன லேப்டாப் பேக்.. "அது அவ்ளோ தான்'னு இருந்தப்போ.." இளம்பெண்ணை தேடி வந்த 'இன்ப' அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > உலகம்நாம் மிகவும் ஆசைப்பட்டு வாங்கும் ஒரு பொருள், அல்லது நாம் அதிகம் பயன்படுத்திய ஒரு பொருள், திடீரென தொலைந்து போனால் நிச்சயம் அது மிகப்பெரிய ஏமாற்றமாக தான் இருக்கும்.
ஆனாலும், அப்படி தொலைந்த ஒரு பொருள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தால், அதைவிட மிகப்பெரிய ஒரு அதிசயமும், ஆச்சரியமும் நிச்சயம் இருக்காது.
அப்படி ஒரு சம்பவம் தான், பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
காணாமல் போன லேப்டாப் பேக்
இது தொடர்பாக கதீஜா என்ற பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்களின் படி, கடந்த 2018 ஆம் ஆண்டு, இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வைத்து, அவரின் லேப்டாப் பேக் தொலைந்து போய் உள்ளது. இந்த லேப்டாப் பேக்கில், ஐ பேடு, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பல பொருட்களும் இருந்துள்ளது.
"மூணு வருஷம் கழிச்சு.."
தனது மொபைல் போனின் பேக்கப் உள்ளிட்ட அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் இருந்ததாகவும் அந்த லேப்டாப் தொலைந்த போது மனம் உடைந்து போனதாகவும் கதீஜா குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் அதிலிருந்து கடந்து வந்துவிட்ட கதீஜாவுக்கு, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஹெலும் என்னும் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர், கதீஜாவின் லேப்டாப் பேக் தன்னிடம் இருப்பதாக கூறி அழைத்து பேசியுள்ளார். மேலும் அந்த பேக் மற்றும் அதற்குள் இருந்த பொருட்களின் புகைப்படங்களையும் எடுத்து அந்த கடைக்காரர் அனுப்பி உள்ளார். அனைத்து பொருட்களும் அப்படியே இருந்ததாக கதீஜா குறிப்பிட்டுள்ளார்.
மனம் உருக வைத்த கடைக்காரர்
அது மட்டுமில்லாமல், கதீஜாவின் லேப்டாப் பேக்கை தன்னிடம் ஒருவர் விற்க முயன்றதாகவும், அதன் பெயரில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த கடைக்காரர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பேக்கை வாங்கி வைத்துக் கொண்ட கடைக்காரர், அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஹார்ட் டிஸ்க்கில் இருந்த புகைப்படத்தின் மூலம், கதீஜாவின் தோழி ஒருவரின் நம்பரையும் எடுத்துள்ளார் அந்த கடைக்காரர். பின்னர், அந்த தோழியிடம் இருந்து கதீஜாவின் நம்பரை வாங்கி அழைத்து பேசியுள்ளார் கடைக்காரர். இதன் பின்னர், கதீஜாவின் சகோதரர், ஜெலும் பகுதிக்குச் சென்று அந்த கடைக்காரரிடம் இருந்து கதீஜாவின் பேக்கை திரும்பி வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
மேலும், அந்த கடைக்காரர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், அப்படி இருந்தும் தனக்கு கிடைத்த பொருளை விற்காமல், சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்த அவரின் நேர்மையான குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.