'அழுதால் கண்ணீருக்குப் பதில்'... 'இளம்பெண்ணுக்கு வந்த விநோத நோய்’... ‘அதிர்ச்சியான டாக்டர்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Sep 23, 2019 06:45 PM
கண்ணில் நீருக்கு பதில் கிறிஸ்டல் கற்கள் வரும் விநோத நோய் காரணமாக, வலியால் இளம்பெண் துடிதுடிக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்மீனியா நாட்டில் 22 வயதான சாடெனிக் கஸர்யான் எனும் இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கண் வலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு கண்களில் இருந்து, நீர் வராமல், கண்ணாடித்துண்டு போன்று ஒன்று தென்பட்டுள்ளது. அவரது கண்ணைப் பார்த்த உறவினர்கள், பணியின் போது கண்ணாடித் துண்டு ஏதோ சிக்கியிருப்பதாகக் கூறி அகற்றினர். இருப்பினும் வலி தொடர்ந்ததால், கண் மருத்துவரை அணுகிய போது மருந்து அளித்ததால் சில கிறிஸ்டல் கற்கள் அகற்றப்பட்டன.
அதன் பின்பும் கண்களில் உறுத்தல் இருந்தது. கண்களில் கிறிஸ்டல் கற்கள் வருவது அதிகரித்துக் கொண்டே சென்றது. நாளொன்றுக்கு 50 கற்கள் வரை வந்ததையடுத்து, வலி பொறுக்காமல் பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியபோதும் மருத்துவர்களால் நோயைக் கண்டறியமுடியவில்லை. புரோட்டீன் அல்லது உப்புச் சத்து அதிகமானால் அது கண்ணீரின் வடிவத்தை திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றக் கூடும் என்று ரஷ்ய கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புக்களிலும் இது போன்று ஏற்பட்டிருக்கும் என்பதால், நோய்க்கான காரணத்தை கண்டறிந்து விரைந்து குணப்படுத்துதல் அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதுமட்டுமின்றி, மரபணு அல்லது ஏதாவது தொற்று காரணமாக இவ்வாறு ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஏழையான அப்பெண்ணின் சிகிச்சைக்கு உதவுவதாக அந்நாட்டு, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.