'தேவையில்லாமல் கருப்பையை நீக்கிய மருத்துவர்'... 'வெளிவந்த மருத்துவரின் பகீர் பிளான்'... அதிர்ந்துபோன நோயாளிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்மகளிர் மருத்துவ நிபுணர், தனது நோயாளிகளுக்குத் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்த குற்றத்திற்காக 465 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம், செசபீக்கைச் சேர்ந்த மருத்துவர் ஜாவித் பெர்வைஸ். மகளிர் மருத்துவ நிபுணரான இவர் கர்ப்பிணி நோயாளிகளைப் பிரசவ காலத்துக்கு முன்கூட்டியே தூண்டி அறுவை செய்துள்ளார். அதேபோன்று நிரந்தர கருத்தடைகளுக்கு 30 நாள் காத்திருப்பு காலங்களை மீறியுள்ளார். சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் புற்றுநோய் வராமல் இருக்க அறுவை சிகிச்சை அவசியம் எனக் கூறி அறுவை சிகிச்சை செய்ததோடு அவர்களிடம் இருந்து பணத்தையும் கறந்துள்ளார்.
பெர்வைஸ் கடந்த 10 ஆண்டுக் காலத்தில், தன்னிடம் சிகிச்சை பெற்ற 41.26% நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார், ஆனால் ஒரு சராசரி மருத்துவர் வெறும் 7.63% நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர் ஜாவித் பெர்வைஸ் தனது நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியாகத் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்வதாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல வழக்குகள் கருப்பை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பானவை.
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் பெர்வைஸ் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை அறுவை சிகிச்சைக்குப் பெற்றுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளிவந்த நிலையில் நோயாளிகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனிடையே மருத்துவர் ஜாவித் பெர்வைஸ்க்கு 465 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பில், "மருத்துவர்கள், மக்களின் நம்பிக்கைக்குரிய இடத்தில் உள்ளனர், தங்களின் நோயாளிகளுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் பெர்வைஸ் தேவையற்ற மருத்துவ நடைமுறைகள் மூலம் தனது நோயாளிகளுக்கு நீடித்த சிக்கல்கள், வலி மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நோயாளிகளின் எதிர்கால வாழ்க்கையையும் சிதைத்துள்ளார்" என்று நீதிமன்ற ஆணையில் கூறப்பட்டுள்ளது