உலகின் நீளமான கார்.. கின்னஸ் ரெக்கார்டு படைத்த இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?..
முகப்பு > செய்திகள் > உலகம்நம் வாங்கும் கார்கள் நல்ல நீளமாக, ஸ்பேசியஸ்-ஆக இருக்க வேண்டும் என நினைப்போம். அதுவே, 100 அடி நீளத்தில் காரை பார்த்தால் நமக்கு என்ன தோன்றும். உண்மைதான். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த லிமோ என்னும் கார் தான் இப்போது உலகத்தின் மிக நீளமான கார் என கின்னஸ் நிர்வாகம் சான்று அளித்து இருக்கிறது.

முதல் சாதனை
1986 ஆம் ஆண்டு, முதன்முதலில் கலிபோர்னியாவின் பர்பாங்கில் புகழ்பெற்ற கார் சேகரிப்பாளரான ஜே ஓர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது தான் தி அமெரிக்கன் ட்ரீம் என்னும் கார். 18.28 மீட்டர் (60 அடி) நீளமுள்ள இந்த காரில் 26 சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காரின் முன் மற்றும் பின் புறத்தில் V8 இன்ஜின்களை பொருத்தி இருந்தனர். சிறிது காலத்திற்கு பிறகு காரின் நீளத்தை 100 அடியாக ஓர்பெர்க் அதிகரித்தார்.
ஆனால், அதன் பின்னர் இந்த கார் கைவிடப்பட்டு இருக்கிறது. பிரபல இணைய வழி வர்த்தக இணையதளமான eBay மூலமாக இந்தக் காரை வாங்கி இருக்கிறார் மைக்கில் மேனிங் என்னும் தொழில்நுட்ப அருங்காட்சியக உரிமையாளர். அதுவும் கொஞ்ச காலம் தான். மீண்டும் கார் eBay-வில் விற்பனைக்கு வந்தது.
சீரமைப்பு
2019 ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள டெசர்லாண்ட் பார்க் கார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் மைக்கேல் டெசர் என்பவர் இந்தக் காரை வாங்கினார். மேலும், காரை சீரமைக்க நினைத்த டெசர், மைக்கில் மேனிங்-கை இந்தப் பணியில் ஈடுபடுமாறு டெசர் அழைப்பு விடுத்தார்.
3 வருட பணி
காரை சீரமைக்கும் பணியில் மேனிங்-ன் குழு ஈடுபட்டது. கார் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓர்லாண்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது. அங்கே 100 அடி இருந்த காரை 30.54 மீட்டர் (100 அடி மற்றும் 1.50 அங்குலம்) நீளமுள்ளதாக மாற்றி இருக்கிறார் மேனிங். இதன்மூலம் உலகின் மிக நீளமான கார் என்ற சாதனையை 1.50 அங்குல வித்தியாசத்தில் இந்தக் காரே முறியடித்து இருக்கிறது. இந்தக் காரை மறுசீரமைக்க 250,000 அமெரிக்க டாலர்கள் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன இருக்கு?
26 சக்கரங்களுடன் இயங்கும் இந்தக் காருக்குள் சுமார் 75 பேர் தங்குவதற்கு போதுமான இடம் உள்ளது. இதில் ஒரு வாட்டர் பெட், டைவிங் போர்டுடன் கூடிய நீச்சல் குளம், ஒரு ஜக்குஸி, ஒரு மினி-கோல்ஃப் மைதானம் மற்றும் சிறப்பாக பலப்படுத்தப்பட்ட ஹெலிபேட் ஆகியவை இருக்கின்றன.

மற்ற செய்திகள்
