'எது நடக்க கூடாதோ அது நடந்து போச்சு'...'முதல் முறையா நடுங்கும் அமெரிக்கா'... 'தாலிபான்கள் கையில் பயோமெட்ரிக்'... அச்சத்தில் உலக நாடுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களின் வசம் கோடிக்கணக்கானவர்களின் பயோமெட்ரிக் சிக்கியுள்ள தகவல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானைத் துப்பாக்கி முனையில் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்த நிலையில் அப்போது பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை அவர்கள் கையாண்டனர். பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, வேலைக்குச் செல்லக்கூடாது. வெளியே செல்வதாக இருந்தால் குடும்ப ஆண்கள் துணைக்குச் செல்ல வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்து இருந்தனர். இதை மீறினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள் அடக்குமுறைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். வேலைக்குச் செல்லும் பெண்களைப் பல இடங்களில் தடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் என்றால் தாலிபான்களால் தற்போது பாதுகாப்புக்கே அச்சுறுதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தற்போது தாலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகளின் தகவல்களைத் திரட்டும் நோக்கில் குறித்த பயோமெட்ரிக் தகவல்களை அமெரிக்க ராணுவம் சேகரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களும் இதில் சேர்க்கப்பட்டது. தாலிபான்களிடம் சிக்கியுள்ள பயோமெட்ரிக் தகவல்களில் 2.5 கோடி பேர்களின் மொத்த தகவல்கள் உள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த தகவல்களைத் தாலிபான்கள் ஆராய்ந்தால், அதில் அமெரிக்க ராணுவத்திற்காக உள்ளூரில் செயல்பட்ட ஆப்கான் மக்களின் தகவல்களும் அவர்களுக்குத் தெரிய வரும். இதனால் தாலிபான்கள் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளைப் பீதியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கைரேகைகள் தொடங்கி முக்கியமான பல தகவல்கள் அதில் பதிவாகியுள்ளது. அதோடு குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளது தான் இந்த அச்சத்திற்குக் காரணமாக உள்ளது. இதற்கிடையே பயோமெட்ரிக் கருவிகளைக் கைப்பற்றியுள்ள தாலிபான்களால் அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாது எனவும், அதற்கான நிபுணர்கள் குழு ஒன்றும் அவர்களிடம் இல்லை என்றே அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால் தாலிபான்களைக் குறைத்து மதிப்பிட முடியாது எனவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாலிபான்கள் நாங்கள் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்து விட்டார்கள் என்பதே சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.