'ஒரே ஒரு டிராபிக் ஜாம்'... 'ஒரு நாளைக்கு 70 ஆயிரம் கோடி இழப்பு'... 'ஆட்டம் கண்ட உலக பொருளாதாரம்'... வெளியான புதிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே ஒரு டிராபிக் ஜாம் உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்குவது தான் சூயஸ் கால்வாய். இந்த கால்வாய் மூலமாகத் தான் உலகின் 12 சதவீத சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. உலகின் மிக முக்கியமானதும், உலக பொருளாதாரத்தின் ஆணி வேராகவும் சூயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது. இந்த சூயஸ் கால்வாய்க்காகப் போர்களும் நடந்துள்ளது என்பது தான் சுவாரசியமான ஒன்று. அப்படிப் பட்ட சூயஸ் கால்வாய் தான் தற்போது கொரோனவை விட பேசு பொருளாக மாறியுள்ளது.
மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி. இதற்கு மாற்று என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாகச் சுற்றிக்கொண்டு செல்வதே ஆகும். இது மிகவும் நீளமான சுற்றுவழி. இந்நிலையில் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கொள்கலன் கப்பலான 'எவர்க்ரீன்' குறுக்காகத் திரும்பி தரைதட்டி மாட்டிக் கொண்டது.
இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியின் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் மணிக்கு ரூ. 2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த கால்வாய் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 510 கோடி அமெரிக்க டாலர் என்றும், கிழக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 450 கோடி அமெரிக்க டாலர் என்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பான வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதற்கிடையே திடீரென வீசிய பலத்த காற்றால் பாதை மாறிப்போன இந்தக் கப்பல் துரதிர்ஷ்டவசமாகத் தரை தட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கூறியுள்ள நிலையில், கப்பலை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து துரித கதியில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த பணிகள் முடிய இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் என அஞ்சப்படுகிறது.
சூயஸ் கால்வாய் வழியாக பெட்ரோலியம் தவிர, துணி, அறைகலன்கள், கார்கள், ஆலைத் தயாரிப்புகள் போன்ற நுகர்பொருள்கள் இந்த கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கப்பல் குறுக்காகத் திரும்பி தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாகச் செல்லவேண்டிய பிற கப்பல்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயின் இரு புறமும் 160 கப்பல்கள் தற்பது காத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 41 பெரிய சரக்குக் கப்பல்கள், 24 கச்சா எண்ணெய் கப்பல்கள் அடக்கம்.
இந்நிலையில் தற்போது கப்பல்கள் காத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளின் தாமதத்தைச் சரி செய்ய இரண்டு நாள்கள் தேவைப்படும் என்கிறார் ஓ.எல். யுஎஸ்ஏ என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆலன் பேயர். ஆனால் மீட்புப் பணி சில வாரங்கள் வரையில்கூட ஆகலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
இதனால், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் தற்போது தான் மெல்ல மெல்ல எழும்பி வரும் நிலையில், சூயஸ் கால்வாய் பிரச்சனை மீண்டும் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கும் என அஞ்சப்படுகிறது.