பனிப்போரை முடிவிற்கு கொண்டுவந்த மிகைல் கோர்பசேவ் மறைவு .. உலக தலைவர்கள் இரங்கல்.. யார் இவர்..?
முகப்பு > செய்திகள் > உலகம்சோவியத் யூனியனின் கடைசி அதிபரான மிகைல் கோர்பசேவ் மரணமடைந்ததாக ரஷ்ய அரசு அறிவித்திருக்கிறது. இதனையடுத்து உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோவியத் யூனியன்
லெனின், ஸ்டாலின் காலத்தில் வலுப்பெற்ற சோவியத் யூனியன் அன்றைய உலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்று. இருப்பினும் அதனுள் இருந்த பல கட்டுப்பாடுகள் உலக அளவில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தன. மேலும், சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த பிராந்தியங்கள் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்த நிலையில், அந்த கோரிக்கைகளை முழுமனதுடன் ஏற்றவர் அப்போதைய சோவியத் யூனியனின் அதிபராக இருந்த மிகைல் கோர்பசேவ். 1985 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் பொதுச் செயலாளராக பதிவியேற்ற மிகைல் அதனை தொடர்ந்து அதிபரானார். அவர் கொண்டுவந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அப்போதைய அரசியல் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
குறிப்பாக, சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த லிதுவேனியா, உக்ரைன் உள்ளிட்ட 15 நாடுகள் தனியாக பிரிய உரிமைகோரிய நிலையில் அதனை ஏற்றுக்கொண்டார் கோர்பசேவ். இதன்மூலம் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தது.
பனிப்போர்
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள் பல அதிரடி திருப்பங்களை கொண்டிருந்தன. குறிப்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான போட்டிகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு அதிகரித்தன. இதன் விளைவாக பல நாடுகளில் நடைபெற்ற உள்நாட்டு கலவரங்களில் இரு நாடுகளும் தலையிட துவங்கின. இதுஒருபுறம் இருந்தாலும், ஆயுத தயாரிப்பு, ஆராய்ச்சிகள் என அமெரிக்காவும் ரஷ்யாவும் மறைமுகமான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. இதனால் உலகமே பரபரப்புடன் இருந்துவந்தது.
இதனை முடிவிற்கு கொண்டுவந்தார் கோர்பசேவ். அப்போதைய அமெரிக்க அதிபர் ரெனால்ட் ரீகனுடன் ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பல ஆண்டுகள் நீடித்துவந்த பதற்றத்தை முடிவிற்கு கொண்டுவந்தார்.
மறைவு
வெகுநாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த கோர்பசேவ் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது 91 வது வயதில் மரணமடைந்ததாக மாஸ்க்கோவில் உள்ள மருத்துவமனை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து, ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்டரஸ், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
