'என்னங்க, பென்சிலை காணோம்ன்னு சொல்றது போல இருக்கு'... '53 வீரர்களின் கதி என்ன'?... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்53 வீரர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்காதது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியக் கடற்படையைச் சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல் பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கப்பல் குறித்து எந்தவித தகவலும் இல்லை. பின்னர் சிறிது நேரத்தில் 53 வீரர்களுடன் கப்பல் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து காணாமல் போன நீர்மூழ்கியின் பெயர் கேஆர்ஐ நாங்கலா 402. அக்கப்பலைக் கண்டுபிடிக்கப் போர்க் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனேசியாவின் ராணுவத் தளபதி கூறியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமும் கேஆர்ஐ நாங்கலா 402 கப்பலின் தேடுதல் பணிக்கு உதவி கேட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்நாடுகள் இந்தோனேசிய நீர் மூழ்கிக் கப்பல் குறித்தோ அக்கப்பலின் தேடுதல் பணிகள் குறித்தோ பொதுவெளியில் எதையும் குறிப்பிடவில்லை. இதனிடையே இந்தோனேசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், புதன்கிழமை அதிகாலை அந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.
நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போன பகுதி என்பது ஆழமான பகுதி எனக் கூறப்படுகிறது. ஆழமான பகுதியில் மூழ்கிச் செல்ல, அந்த நீர்மூழ்கிக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட பிறகு தான், அக்கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும் சில செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தோனேசியா வைத்திருக்கும் 5 நீர் மூழ்கிக் கப்பல்களில் இதுவும் ஒன்று ஆகும். வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தோனேசியாவின் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போயிருக்கிறது என இந்தோனேசியக் கப்பல் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு அர்ஜெண்டினா பாதுகாப்புப் படையின் நீர் மூழ்கிக் கப்பல் 44 வீரர்களுடன் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போனது. கிட்டத்தட்ட ஓராண்டுக் காலத்துக்குப் பிறகு, காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கிடைத்தன. அதன் பின், அந்த கப்பல் அழிந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.