SANNA MARIN: பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல பின்லாந்து பிரதமர் சன்னா மரின், கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

பின்லாந்து பெண் பிரதமரான சன்னா மரின், பிரபலங்கள் சிலருடன் சேர்ந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் இணைந்து, அவர்களுடன் நடனமாடியது போன்ற வீடியோக்கள் வெளியாகின. அந்த நிகழ்ச்சியில் போதை பொருட்கள், மது உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாகவும் சன்னா மரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை அடுத்து சன்னா மரின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பின்றி இப்படி மது, போதை என நண்பர்களுடன் கேளிக்கை நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருப்பது சரிதானா? என்பது குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் பேரலையாக எழுந்தன. ஒரு தரப்பினர் இதை விமர்சனம் செய்ய தொடங்கினர். இன்னொரு தரப்பினர் எந்த தவறும் செய்யாத சன்னா மரின், தம் நண்பர்களுடன் இயல்பாக நடனமாடியதை பெரிதுபடுத்தி அவருடைய அரசியல் வாழ்க்கையை கலங்கப் படுத்துவதற்காக இப்படி செய்வதாகவும் குற்றம் சாட்டி வந்தனர்.
இன்னும் பலர் ஒரு பெண் என்பதாலேயே பின்லாந்து பெண் பிரதமர் இப்படி விமர்சிக்கப்படுகிறார் என்றும், இது எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய இயல்பான ஒன்றுதான், அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு செய்துவிடவில்லை, அந்த தவறும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறிவந்தனர். இதனிடையே சன்னா மரின், தான் மது அருந்தியதாகவும், அதே சமயம் சட்டவிரோதமான போதை பொருட்கள் எதையும் உட்கொள்ளவில்லை என்றும் தன்னுடைய தரப்பு விளக்கத்தை தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது, அதன்படி சன்னா மரின், போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் அவர் மீதான விமர்சனங்களுக்கு எதிரான இந்த பரிசோதனை முடிவை கொண்டாடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
