'வெடிக்கும் வன்முறை'.. 'வலுக்கும் போராட்டம்'.. 'சிலியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!'
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Oct 22, 2019 04:56 PM
தென்னமெரிக்க கண்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள சிறிய நாடு சிலி. 1 கோடியே 75 லட்சம் பேர் வாழும் இந்த நாட்டில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் அண்மையில் தொடங்கியது. ஆனால் தற்போது போராட்டம் வலுத்து கலவரம் பெருகிவருவதன் காரணமாக தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ, பியூண்டே அல்ரோ மற்றும் சான் பெர்னார்டோ உள்ளிட்ட பகுதிகளில் அவசர நிலை (எமர்ஜென்ஸி) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்தின்போது சூப்பர் மார்க்கெட் ஒன்று தீப்பற்றி எரிந்தபோது 4 பேர் பலியாகினர்.
முன்னதாக கடந்த 2012,2013-ஆம் ஆண்டுகளில் இலவசக் கல்வி வழங்கக்கோரி சிலி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு கடந்த சிலி நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமையை கண்டித்து கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கடந்த ஜூன் மாதம் சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்றது. இவ்வளவு ஏன்? சிலி நாட்டில் கரையொதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்பக் கோரி கூட நெடுநேரம் போராட்டம் நடத்தி அதையும் உலகச் செய்திகளில் வரவழைத்துள்ளனர். அத்தகைய போராட்ட மரபு சிலி நாட்டின் வரலாற்றில் இருந்து தனியே பிரித்தெடுக்க முடியாதது என்கிற அளவுக்கு போர்ச் சூழல் சிலியில் இருந்திருக்கிறது.
இந்நிலையில், அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ரயில் எரிப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிபரை பதவி விலகக் கோரியும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.