"'திடீர்'னு எங்க இருந்து வந்துச்சுன்னே தெரில... ஆனா, இப்போ என்னடான்னா..." இன்னும் விலகாத '12' அடி உலோகத் தூண் 'மர்மம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் உட்டா என்னும் பகுதியில் அமைந்துள்ள ரெட் ராக் என்னும் பாலைவனத்தில் ஆடுகள் கணக்கெடுப்பு பணியின் போது, ஒரு பள்ளத்தாக்கின் அருகே செங்குத்தாக தரையில் பொருத்தப்பட்டிருந்த மர்ம உலோகம் ஒன்றை பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அது என்ன மாதிரியான உலோகம் என அறிந்து கொள்ள வேண்டி அதிகாரிகள் அதனருகில் சென்றனர். சுமார் 12 அடி உயரமுள்ள முக்கோண வடிவிலான தூண் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அது எப்படி அங்கு வந்தது, யார் அதனை அங்கே வைத்தார்கள் என எந்த விவரமும் தெரியவில்லை.
அவ்வளவு பெரிய தூண் அப்படி ஒரு பகுதியில் எப்படி வந்திருக்க சாத்தியம் என்ற மர்மம் எழுந்த நிலையில், மிகவும் கரடு முரடான பகுதியில் அதை அங்கு கொண்டு வைப்பது என்பது இயலாத காரியம். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகாரிகள் வெளியிட, உலகளவில் இந்த மர்மமான உலோகத் தூண் பேசு பொருளானது.
ஏலியன்களின் வேலையாக இருக்கும் என்பது தொடங்கி பல்வேறு காரணங்களை உலகளவில் மக்கள் முன் வைத்த நிலையில், சரியாக அந்த உலோகமுள்ள இடத்தை அறிவித்தால் மக்கள் அதிகம் கூடி விடுவார்கள் என அதிகாரிகள் சரியான இடத்தை குறிப்பிடவில்லை. ஆனாலும், மக்கள் அந்த இடத்தை கண்டறிந்து அங்கு செல்ல முயன்றனர்.
இப்படி அங்கு சென்ற ட்ரெக்கிங் வீரர் ஒருவர் அந்த உலோகத் தூண் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அந்த மர்ம உலோகம் அந்த இடத்தில் இல்லை என யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாங்கள் அதனை அகற்றவில்லை என அவர்கள் அறிவித்துள்ள நிலையில், எப்படி மர்மமாக தோன்றியதோ அதே போல தற்போது அது மறைந்தும் போயுள்ளது.
ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டில் பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் உட்டா என்னும் பாலைவன பகுதியில் தற்போது நடந்துள்ள சம்பவமும் உலக மக்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. மனிதர்கள் யாராவது இப்படி ஒரு வேலையை செய்து அவர்களே அதனை அகற்றினார்களா என்றும் மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
