"கல்யாணம் தான... பண்ணிக்க வேண்டியதுதானப்பா..." பெற்றோர் வற்புறுத்தியதால் நேர்ந்த விபரீதம்... வாலிபர் செய்த காரியத்தால் பதறிப் போன பெற்றோர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் வாலிபர் தன்னைத் தானே நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 31) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் படித்து முடித்ததும் துப்பாக்கி சுடும் பயிற்சி அகாடமி நடத்த முடிவு செய்தார். இதற்கு அவரது பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து தமிழக அரசு மற்றும் காவல் துறை அனுமதியுடன் தனது வீட்டின் ஒரு பகுதியிலேயே 'பார்ன் ஷூட்டிங் அகாடமி' என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தார். இதற்காக பிரத்யேகமான துப்பாக்கிகளையும் அவர் வாங்கி வைத்திருந்தார்.
இதற்கிடையே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் சசிகுமார் தொடர்ந்து மறுத்து வந்தார். இதுதொடர்பாக பெற்றோருக்கும், சசிக்குமாருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை திருமண விஷயம் தொடர்பாக மீண்டும் அவர் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று தான் நடத்தி வரும் பயிற்சி அகாடமி அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டார்.
இதையடுத்து திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பதறிப் போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பூட்டியிருந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்தார். உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
