"அவங்க இங்க நல்லாருக்காங்க" - தன் வீட்டு விசேஷத்துக்கு சீர்வரிசையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள் குறித்து உரிமையாளர் EXCLUSIVE பேட்டி
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடமாநில தொழிலாளர்கள் குறித்து நிறைய செய்திகள் பெரிய அளவில் பேசு பொருளாகி பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சில அறிக்கைகளும் வெளியாகி இருந்தது.
தமிழ்நாட்டின் பல இடங்களில், இன்று ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தங்களின் முதலாளி ஒருவரது வீட்டு விசேஷத்திற்காக வடமாநில தொழிலாளர்கள் சேர்ந்து செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
சென்னை பூந்தமல்லி பகுதியை அடுத்த செம்பரம்பாக்கம் என்னும் இடத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பெயர் பத்மாவதி. கட்டுமான நிறுவன உரிமையாளராக இருந்து வரும் ராஜாமணியிடம் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது ராஜாமணிக்கு அதிக அன்பும், அக்கறையும் உள்ளதுடன் அவர்களை சிறந்த முறையில் கவனித்தும் வந்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் ராஜாமணியின் மகள் விஷ்ணு பிரியாவிற்கு பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு தன்னிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ராஜாமணி. இந்த நிலையில் தங்களின் முதலாளியின் அழைப்பை ஏற்று சுமார் 50 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இந்த பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். வெறுமென விருந்தினர்களாக அந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் சீர்வரிசை தட்டுகளுடன் அவர்கள் கலந்து கொண்டது தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் தம்மிடம் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய கட்டுமான உரிமையாளர் ராஜாமணி, “இவர்கள் வட மாநிலங்களை விட இங்கு நன்றாகவே இருக்கிறார்கள், அவர்களின் ஊர்களுக்கு நாங்கள் சென்று பார்த்திருக்கிறோம், அவர்கள் மிகவும் வறுமையான மற்றும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்திருக்கிறார்கள். ரேஷன் அரிசிகளை நாம் சாப்பிடுவதில்லை, ஆனால் இவர்கள் அந்த அரிசியை விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்னும் கூரை வீடுகளில் இருக்கிறார்கள். விடுப்பு எடுக்காமல் எந்நேரமும் உழைக்க தயாராக இருக்கிறார்கள். இவர்கள் இங்கேயே சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டு இருப்பதால் ஒரு அவசரகால சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அவர்கள் அதற்கு தயாராகவும் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இதேபோல் இந்த வீடியோவில் பேசிய வடமாநில தொழிலாளர்கள் சிலர், வீட்டில் மிகவும் கஷ்டம், வடமாநிலங்களில் செய்யும் வேலைகள் இன்னும் கஷ்டம், ஆனால் சம்பளம் குறைவு என்பதால் இங்கு வந்து பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இங்கு பணிபுரிவதால் தங்கள் வீடுகளில் இருக்கும் சிறிய சிறிய கமிட்மெண்டுகளை விரைவாக முடிப்பதாகவும் கூறுகின்றனர்.
திருமணம், விசேஷம், வீடு கட்டுவது உள்ளிட்ட பலவற்றிற்கும் இங்கிருந்து பணம் அனுப்புவதாக தெரிவிக்கும் இவர்கள், இங்கு தங்களுக்கு தேவையானவற்றை உரிமையாளர்கள் செய்து தருவதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் இங்கு பல வருடங்களாகவே இருப்பதால், தங்கள் உரிமையாளரின் இல்ல விசேஷத்திற்கு இங்குள்ள முறையில் சீர்வைக்கவேண்டும் என இங்கு பணிபுரியும் 35 பேரும் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.