'விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்தது'... 'சிகிச்சை பலனளிக்காமல் போனது ஏன்'?... மருத்துவமனை விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நடிகர் விவேக்குக்குச் சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை என்று தெரிவித்துள்ளது சிம்ஸ் மருத்துவமனை.
சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மரணம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாரடைப்பு காரணமாகச் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.
இதற்கிடையே நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் ராஜூ சிவசாமி விளக்கமளித்துள்ளார். அதில், ''நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது விவேக்குக்குச் சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை. உடல்நிலையைப் பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
விவேக்கின் உடல்நிலை மோசமாக இருந்தது. விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகர் விவேக்கின் மரணம் திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் என்பதையும் தாண்டி சமூக நலனில் விவேக் கொண்டிருந்த அக்கறை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று எனப் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.