'கவலை படாதீங்க அப்பா, கண்டிப்பா சென்னைக்கு கூட்டிட்டு போவேன்...' 'பெற்று வளர்த்த 94 வயது தந்தையை நடுத்தெருவில் தள்ளிய மகன்...' வாசலில் அமர்ந்து அழுத தந்தை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 09, 2020 06:31 PM

தனது 94 வயது தந்தையை வெளியே தள்ளி வீட்டை பூட்டு போட்டு சென்னை கிளம்பிய மகனால் செய்வதறியாது தவித்து வருகிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்ற முதியவர்.

The son left his 94-year-old father out of the house

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த முதியவர் முனுசாமி(94). இவருக்கு 1 மகளும், 2 மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி இவரது மனைவி வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.

தாயின் இறுதி சடங்கில் பங்கு கொள்வதற்காக சென்னையில் இருந்து சேலம் வந்துள்ளார் இவரது மூத்த மகன் சௌந்தர்ராஜன். ஆனால் முன் விரோதம் காரணமாக தனது தம்பி ரவியையும், தங்கை புஷ்பவள்ளியையும் வீட்டினுள் விடவில்லை. மேலும் இவர்கள் வசித்து வந்த சேலத்தில் இருக்கும் வீட்டை, முனுசாமி தனது மூத்த மகன் சௌந்தர்ராஜனுக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தாயின் இறுதி சடங்குகள் முடிந்த பின் முனுசாமியை தன்னுடன் சென்னைக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் அதற்கு அடுத்த நாளே அப்பாவை வெளியே விட்டுவிட்டு, வீட்டினை பூட்டிவிட்டு  சௌந்தர்ராஜன் சென்னை வந்துள்ளார்.

சொந்த மகனே திடீரென வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் செய்வதறியாது தடுமாறிய முனுசாமி, வீட்டு வாசலில் உட்கார்ந்து அழுதுள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் முனுசாமியின் மகள் மற்றும் மகனுக்கும், அருகில் இருக்கும் காவல் நிலையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக பூட்டியிருந்த வீட்டை உடைத்து முதியவரை வீட்டுக்குள் அழைத்து சென்று ஆறுதல் படுத்தினர். தற்போது அவர் தன்னுடைய மகள் மற்றும் இளைய மகன் பராமரிப்பில் உள்ளார்.

மேலும் தன்னை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய தன்னுடைய மூத்தமகன் மீது, முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தன் சொத்தை மீட்டுக் கொடுக்குமாறு காவல் நிலையத்தில் முனுசாமி புகார் அளித்துள்ளார்.