'ECR பீச்சில் மாளிகை வீடு'... '16 சொகுசு கார்கள், மினி தியேட்டர்'... 'யாரு சாமி இவரு'?... அதிகாரிகளை கதிகலங்க வைத்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்புன் இருப்பதாகக் கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரை ஏமாற்றி பண மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் டி.டி.வி. தினகரன் இறங்கினார். அப்போது டி.டி.வி. தினகரன் தரப்புக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம் நடைபெற்ற விசாரணையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் ஒரு மோசடி பேர்வழி என்ற விவரம் தெரியவந்தது.
இதுபோல பலரை ஏமாற்றிப் பல மோசடி நிகழ்வுகளில் ஈடுபட்டு சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், டெல்லி அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரித்து பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை நேற்று முடிவுக்கு வந்தது. சென்னையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் பங்களாவில் நடைபெற்ற சோதனையில், அந்த வீட்டில் 16 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் நடிகர்கள் பயன்படுத்தும் சொகுசு கேரவானும் அங்கே இருந்தது. மாளிகை போல இருக்கும் அந்த வீட்டிற்குள், மினி தியேட்டர், உயர்ரக பார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் இருப்பதை போன்று உணவருந்தும் இடம் என அந்த வீடே ஜொலித்தது.
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் அந்த பங்களாவுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.