'திருப்பூரையும் விட்டுவைக்காத 'எவர்கிரீன்' கப்பல்'... 'சூயஸ் கால்வாய்க்கும் திருப்பூருக்கும் என்ன தொடர்பு'?... பின்னணி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர்கிரீன் சூயஸ் கால்வாயில் சிக்கியிருப்பது திருப்பூர் வரை எதிரொலித்துள்ளது.
ஆசியா-ஐரோப்பா இடையிலான கடன் வழி போக்குவரத்துக்கு சூயஸ் கால்வாய் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது. இந்தநிலையில் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர்கிரீன் அங்குத் தரை தட்டி நிற்பதால் சூயஸ் கால்வாய் அடைபட்டுள்ளது. இதனால் அந்த மார்க்கமான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் அங்குக் காத்துக் கிடக்கின்றன.
கால்வாய்க்கு இருபுறம் உள்ள நாடுகளிலிருந்து சரக்குகள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. தரை தட்டிய சரக்கு கப்பலை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது எவர்கிரீன் கப்பல் மிதக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உலக பொருளாதாரமே ஒரு சங்கிலி போன்று தான் இயங்கி வருகிறது என்பதை மீண்டும் இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
ஐரோப்பாவுடன் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் வணிக தொடர்பு வைத்துள்ளார்கள். திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் ஐரோப்பா நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி துறைக்கு, ஐரோப்பா மிக முக்கியமான சந்தையாக உள்ளது.
ஆண்டுதோறும் அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் கப்பல் சிக்கியிருப்பது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களைக் கவலையில் தள்ளியுள்ளது. இதுகுறித்து பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர், ''கொரோனாவுக்கு பின்னர் கண்டெய்னர்களுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆயத்த ஆடைகளை அனுப்ப உரியக் காலத்தில் கண்டெய்னர் கிடைக்காமல் பின்னலாடை நிறுவனங்கள் தவித்து வருகின்றன. தற்போது சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது கவலையை உருவாக்கியுள்ளது. இதனால் உடனடி பாதிப்புகள் தற்போது இல்லை என்றாலும், கப்பலை மீட்க தாமதம் ஏற்பட்டால், ஐரோப்பிய நாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளை அனுப்பச் சிக்கல் ஏற்படும்.
சூயஸ் கால்வாயைத் தவிர்க்கும் பட்சத்தில் ஆப்பிரிக்காவைக் கடந்து தான், ஐரோப்பிய நாடுகளுக்குக் கப்பல் செல்ல முடியும். இதனால் பயண காலம் அதிகரித்து சரக்கு கட்டணமும் உயர்ந்து விடும். இது ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பல வகை உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
அது வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கும். எனவே இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்து நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே எண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது'' எனக் கூறியுள்ளார்.