'கணவர் இறந்தபோது வயசு 35'... 'சும்மா பேசுனா கூட வித்தியாசமா பார்த்த கண்கள்'... 'தைரியமாக 2 மகன்கள் எடுத்த முடிவு'... நெகிழவைக்கும் சம்பவம் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்35 வயதில் தனது தந்தையை இழந்த தாய்க்கு 2 மகன்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகுத் தனது மனைவியை இழந்துவிட்டால் அவர் திருமணம் செய்து கொள்வதில் எந்த தடங்கலோ அல்லது விமர்சனங்களோ இல்லை. அவர் இளம் வயதாக இருந்தாலும், நடுத்தர வயதாக இருந்தாலும் ஏன் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் அதே ஒரு பெண் இளம் வயதில் தனது கணவரை இழந்தால் கூட அவர் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது அல்ல.
அப்படி ஒரு முடிவை ஒரு பெண் எடுத்தால் அவர் சாதாரணமாக அவர் விரும்பிய வாழ்க்கையை அடைந்து விட முடியாது. அப்படிப் பட்ட ஒரு சமூக கட்டமைப்பில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அப்படி ஒரு கட்டமைப்பை உடைத்து தனது தாய்க்கு மகனே முன்வந்து முன்னுதாரண மறுமணத்தைச் செய்துவைத்துவிட்டு அதைப் புத்தகமாகவும் எழுதியுள்ளார். அந்த இளைஞர் தான் சித்தார்த்தன் கருணாநிதி (இயற்பெயர் பாஸ்கர்).
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 28. தம்பி விவேக் 26 வயது இளைஞர். இருவரும் படித்து விட்டு தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். இருவரும் இணைந்தே இந்தத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், தனது தனிப்பட்ட அனுபவத்தைப் புத்தகமாக எழுதினார் சித்தார்த்தன் கருணாநிதி.
அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ள இந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தனது அனுபவம் குறித்து ஹிந்து நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். சித்தார்த்தனின் சிறு வயது என்பது அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இல்லை. குடும்ப வறுமை காரணமாக மோர் விற்பனைக்குச் செல்வது என சிறுசிறு வேலைகளைச் செய்வதிலேயே அவர்களின் சிறுவயது கழிந்திருக்கிறது.
அந்த சூழ்நிலையிலும் அம்மா படிப்பு மட்டும்தான் சொத்து என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பார் என நினைவு கூர்ந்தார் சித்தார்த்தன். இந்த சூழ்நிலையில் சித்தார்த்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர், அம்மாவுக்கு ஏன் நீங்கள் மறுமணம் செய்துவைக்கக் கூடாது எனக் கேட்டுள்ளார். அப்போது அவருக்குக் கோபமோ, மகிழ்ச்சியோ ஏன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்த உணர்வுமே ஏற்படவில்லை.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சித்தார்த்தன் நிறையப் பெரியார் புத்தகங்களைப் படித்திருந்த நிலையில், ஆசிரியர் சொன்னதை ஏன் நிறைவேற்றக் கூடாது என அவருக்குத் தோன்றியுள்ளது. நீண்ட போராட்டத்துக்குப் பின் அதைச் செய்துவிட்டோம். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். 2 ஆண்டுகளாக நான் எனது வலைப்பக்கத்தில் எழுதிவந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு சிறுகதையாக வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இப்போது என்னைப் பலரும் பாராட்டினாலும் 2021ல் கூட பெண்ணின் மறுமணம் பற்றி எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில்தான் இந்தச் சமூகம் இருக்கிறது என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது எனக் குறிப்பிடும் சித்தார்த்தன், தனது புத்தகத்திற்கு ரைட் டூ மேரி (Right To Marry திருமணத்துக்கான உரிமை) என்றே தலைப்பு வைத்துள்ளார்.
இதற்கிடையே ஊரில் இருப்பவர்களின் மனநிலை குறித்துப் பேசிய அவர், எங்களின் செயலை முதலில் எதிர்த்துப் பழித்துப் பேசிய பலரும், இந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மெல்ல மெல்ல எங்களுடன் வந்து பழகத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் அவர்களின் மனநிலை முழுவதுமாக மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சிலர் எங்கள் செயலின் நியாயத்தைப் புரிந்து கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே என் அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். எனக்குச் சிறு வயதிலேயே விவரம் தெரிந்திருந்தால் நான் அப்போதே அம்மாவைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லியிருப்பேன். இப்போது அம்மா அவரைப் போல் மிக இளம் வயதில் வாழ்க்கைத் துணையைத் தொலைத்தவர்கள் குறிப்பாகப் பெண்களை மீண்டும் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள ஊக்கப்படுத்துகிறார்.
என்னால், ஒரு சிலரின் பார்வையை, செயலை மாற்ற முடிந்திருப்பதை மட்டுமே நான் வெற்றியாகக் கருதுகிறேன் என நிறைவுடன் கூறுகிறார் சித்தார்த்தன். தனது மறுமணம் குறித்துப் பேசிய சித்தார்த்தின் தாய் செல்வி, ''நான் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யதார்த்தமான வாழ்க்கைக்குள் நான் நுழைந்திருக்கிறேன். என்னைப் போலவே துணையை இழந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்திருக்கிறேன். என் கணவர் இறக்கும்போது எனக்கு 35 வயது.
அப்போது என்னைப் பலரும் மறுமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள் ஆனால், என் பிள்ளைகள் எதிர்காலம் என்னவாகும், சமூகம் என்ன நினைக்குமோ என்ற அச்சத்திலேயே நான் அதை மறந்துவிட்டேன். இப்போது என் மகன்கள் எல்லோரும் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிடத் தனிமை மிகப்பெரிய வெறுமையை ஏற்படுத்தியது.
சிறிய வேலைக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்கும் சூழலில் யாரிடம் பேசினாலும், இயல்பாகப் பழகினாலும் அது விமர்சன கண்ணோடு மட்டுமே பார்க்கப்பட்டது. அப்போதுதான் என் மகன் என்னிடம் நீங்கள் ஏன் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனக் கேட்டது நினைவுக்கு வந்தது. எனது விருப்பத்தை என் மகனிடம் தயக்கமின்றி சொன்னேன். அவன், உங்களுக்குப் பிடித்தவரை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று சொன்னார்.
என் தோழி மூலம் என் பக்கத்து ஊர் நபர் பற்றி அறிந்தேன். மகனிடம் சொன்னேன். இன்று நான் மீண்டும் வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் விவசாயி. மிகவும் நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். எனக்குத் தெரிந்த பெண்கள், ஏன் என்னைவிட மூத்த பெண்கள் பலரும் இப்போது என்னிடமே உன்னைப் போல் துணிவிருந்திருந்தால் நாங்களும் எங்களுக்கான வாழ்க்கையை அமைத்திருப்போம் என்று ஆதங்கப்படுகின்றனர்.
சிலர் வெளிப்படையாகப் பாராட்டுகின்றனர். ஆனால் இங்கு மறுமணம் என்பது இரண்டு விதமான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. மனைவியை இழந்த ஆண் குழந்தைகளைக் காரணம் காட்டியே மறுமணம் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணோ அதே குழந்தைகளைக் காரணம் காட்டி பொருளாதாரச் சுமை தொடங்கி அனைத்தையும் தானே சுமக்க இந்தச் சமூகம் ஒரு பெண்ணைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது.
எனது மகன்களை இப்போது பெருமையாகப் பேசுகிறார்கள். அப்படியே இந்த சமுகம் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை விமர்சிக்காமல் இருந்தால் நிச்சயம் என்னைப் போன்றோர் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் தங்கள் வாழ்க்கையை வாழ்வார்கள் என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார் செல்வி.