‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்பட்ட பிரபல எழுத்தாளர் கி.ரா. காலமானார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார்.
தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு திவாகர், பிரபாகர் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கி.ராஜநாராயணன், சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கி.ரா பெற்றுள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை, என போற்றப்பட்ட எழுத்தாளர் கி.ரா., தலைசிறந்த கதை சொல்லி என்றும் புகழப்பட்டார்.
இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக நேற்று நள்ளிரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கி.ரா. (99 வயது) காலமானார். தனது தள்ளாத வயதிலும் தொடர்ந்து எழுதி வந்த கி.ரா.வின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.