'பெத்தவங்க எவ்வளவு கவனமா இருக்கணும்'... 'வலிக்குதுன்னு கூட சொல்ல தெரியாத வயசு'... டாக்டர் எடுத்த ஸ்கேனில் தெரிய வந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால் பெற்றோர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த தம்பதி ஹுதா ஒமர், மஹர் ஷேக். இவர்களுக்கு சல்மா என்ற ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் மூவரும் துபாயில் வசித்து வந்தார்கள். இந்நிலையில் குழந்தை சல்மா எப்போதும் துறு துறுவென விளையாடிக் கொண்டே இருப்பாள். ஆனால் சல்மாவுக்கு நேற்று திடீரென கடுமையான வாந்தியும், காய்ச்சலும் ஏற்பட்டது. பெற்றோருக்கு ஒன்றும் புரியாத நிலையில், சல்மா தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால் பயந்துபோன பெற்றோர் உடனடியாக குழந்தை சல்மாவை அருகிலிருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு சல்மாவை பரிசோதித்த மருத்துவர் உடனே ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது குழந்தை சல்மாவின் வயிற்றில் 8 காந்த மணிகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். குழந்தை விளையாடும் போது அந்த காந்த மணிகளை விழுங்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
அந்த காந்த மணிகள் வயிற்றுக்குள்ளேயே இருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சீழ் வைத்திருக்கிறது. இது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அந்த காந்த மணிகள் அகற்றப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.