'எம்.எஸ்சி படிச்சா என்ன?'... 'இதுவும் சூப்பர் வேலை தான்'... மாணவி எடுத்திருக்கும் ஆச்சரிய முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்.எஸ்சி. படித்து வரும் மோனிகா என்ற மாணவி, துப்புரவு பணியில் சேர்ந்திருக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு 100 வார்டுகள் உள்ள நிலையில், காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கு பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5,200 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர். அதில் இடஒதிக்கீடு அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
அதில் 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு, புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இதில் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த மோனிகா, என்ற எம்.எஸ்சி. படித்து வரும் மாணவிக்கும் துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அந்த மாணவி கூறும்போது, ''எம்.எஸ்சி. படித்து வரும் நான், மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது'' என அந்த மாணவி கூறியுள்ளார்.