ரஜினி பாலபிஷேகம் செய்யணும்ன்னு மயில்சாமி ஆசைப்பட்ட சிவன் கோவில்.. அவரு உருகி வழிபட்ட ஆலயத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல நடிகர் மயில்சாமி, 57 ஆவது வயதில் மரணம் அடைந்த சூழலில், அவரது உடலுக்கு இறுதி சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து தாம்பரத்திலிருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில், கண்டிகை என்னும் இடத்திற்கு அருகேயுள்ள மேலகோட்டையூரில் உள்ள அருள்மிகு 'ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதேஸ்வரர் ஆலயம்' என்ற கோவிலில் சிவராத்திரியன்று மயில்சாமி சென்றிருந்தார். அங்கே டிரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து சிவனை நினைத்து துதி பாடவும் செய்திருந்தார் மயில்சாமி. மேலும் அந்த கோவிலில் சிவராத்திரி இசை கச்சேரிக்கான செலவையும் மயில்சாமி தான் பார்த்துக் கொண்டதாக கூறுகிறார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி மயில்சாமி மிகவும் உருகி சிவனை வழிபட்ட இந்த கோவிலில் சில தனிச்சிறப்புகள் உள்ளது. அதன்படி இந்த கோவிலின் கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கு நோக்கி இருக்கும் சிவலிங்க தரிசனம் என்பது ஆயிரம் கிழக்கு நோக்கி இருக்கும் சிவலிங்க தரிசனத்திற்கு ஒப்பானது என்பது ஐதீகம். இந்த கோவில் கருவறையில் உள்ள லிங்கேஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரில் எழுந்தருளியுள்ளார். சதுர வடிவ ஆவுடையார் லிங்கம் என்றாலே அது மிகமிக பழமையான ஆலயம் என சொல்வதும் உண்டு. மேலும் சதுர ஆவுடையார் ரிஷிகளால் ஸ்தாபிக்கப்படுவது என்ற ஐதீகமும் உண்டு.
இந்த ஆலயத்தின் வரலாற்று பதிவு என பார்த்தால் இங்குள்ள நீண்ட கல்வெட்டு பாதி படிக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. படிக்கக்கூடிய எழுத்துக்களை வைத்து பார்த்தால் இது இராஜராஜசோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோவில் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கே வாசுகி நர்த்தனார் எனும் அபூர்வ சிவன் வடிவம் ஒன்றும் திருக்காட்சி தருகிறது. வாசுகி பாம்பின் மீது சிவபெருமான் நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தன திருக்கோலமாகும்.
இப்படி பல சிறப்பு மிகுந்த சிவன் கோயிலில் மயில்சாமி அடிக்கடி வருவது மட்டுமில்லாமல், நடிகர்கள் விவேக், சிங்கமுத்து உள்ளிட்ட பலரையும் இங்கே அவர் அழைத்து வந்துள்ளார். மயில்சாமி இந்த கோயிலுக்கு வந்தால் வெகு நேரம் இங்கு இருந்துவிட்டு தான் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள மயில்சாமி, தனது இறப்பிற்கு முன்பு கூட அங்கே பல மணி நேரத்தை கழித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதே போல, இந்த கோவிலில் ரஜினிகாந்தை அழைத்து வந்து பாலபிஷேகம் செய்ய வேண்டும் என மயில்சாமி விருப்பப்பட்ட சூழலில் அது நிறைவேறாமல் போனது. தொடர்ந்து, மயில்சாமி இறுதி சடங்கிற்கு வந்த ரஜினிகாந்த், மயில்சாமியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.